வீடுகளில் தேங்கிய மழைநீரை அகற்ற வாடகை மோட்டார் பம்புகள் கிடைக்காமல் மக்கள் அவதி: ‘டிமாண்ட்’ என்பதால் எகிறிய வாடகை

வீடுகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வாடகை மோட்டார் பம்புகள் கிடைக்காமல் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர். மோட்டார் பம்புகளுக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள் வாடகை தொகையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர். சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக்ஜாம் புயலால் பெருமழை பெய்தது. 2015ம் ஆண்டை விட மிக மோசமான கனமழை சென்னையில் பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை சென்னையில் கொட்டி தீர்த்ததால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதுவரையில் வெள்ளம் பாதித்த அடுத்த இரண்டொரு நாட்களில் தண்ணீர் வடிந்து விடும். ஆனால், இந்த முறை வெள்ள நீர் வடியவில்லை. மெதுவாக உள்வாங்கியது. இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிய 4 நாட்களுக்கு மேல் நீடித்தது. சென்னையின் முக்கிய நகரப் பகுதிகள் முதல் புதிதாக உருவான பகுதிகள் வரை வெள்ளத்தில் மூழ்கியது.

வெள்ளநீர் வடிந்து வந்த பகுதிகளில் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. ஒவ்வொரு தெருக்களிலும், வீதிகளிலும் சகதிகள் தேங்கி உள்ளன. வீடுகளில் தேங்கிய சகதியை சுத்தம் செய்வதற்கே பெரும்பாடாக உள்ளது. சென்னையில் தற்போது வெள்ளம் முழுவதுமாக வடிந்துள்ளது. ஆனால் ஏரி பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. இந்நிலையில், சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பினாலும், பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள், வணிக கட்டிடங்களின் தரைப்பகுதிகள் அனைத்திலும் மழைநீர் இன்னும் தேங்கி கிடக்கிறது. குறிப்பாக பார்க்கிங் ஏரியா அனைத்திலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. சென்னையில் பெரும்பாலான வீடுகளில் இதே நிலைமைதான் நீடிக்கிறது.

மழைநீரை வெளியேற்றுவதற்கு பலர் வாடகை மோட்டார் பம்பு செட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் மோட்டார் பம்புகளை கேட்பதால் நீர் வெளியேற்றக் கூடிய மோட்டார் பம்புகளுக்கு சென்னையை பொறுத்தவரை தற்போது அதிக அளவில் டிமாண்டாக உள்ளது. இதை பயன்படுத்தி அதன் உரிமையாளர்கள் ஒரு மணி நேரத்துக்கான வாடகையை பல மடங்கு உயர்த்தி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
சென்னையில் பெய்தது சாதாரண மழை அல்ல, பெருமழை. சென்னையே மிதக்கும் அளவுக்கு பெருமழை கொட்டி தீர்த்தது. சாலைகள், தெருக்களில் தேங்கிய மழைநீரை சென்னை மாநகராட்சி சார்பில் கடுமையாக போராடி வேகமாக அகற்றிவிட்டனர். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், சென்னையில் பல்வேறு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் தரைப்பகுதியில் சராசரியாக 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது. உள்ளே வந்தால் தான் மழைநீர் தேங்கியிருப்பது தெரியும். தெருக்களில் என்றால் மாநகராட்சியே அகற்றிவிடும். ஆனால் வீடுகளுக்குள் தேங்கிய மழைநீரை நாம் தான் அகற்றியாக வேண்டும். தானாக வடிவதற்கும் வழியில்லை. மோட்டார் பம்புகள் மூலம் தான் அதை வெளியேற்ற வேண்டும். பல இடங்களில் மின்சார பெட்டிகள் வரை மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கீழே கால் வைக்கவே பயமாக உள்ளது. இதனால்தான் மழைநீரை அகற்ற வாடகைக்கு மோட்டார் பம்புகளை கேட்டு அலைந்து கொண்டிருக்கிறோம். பல வீடுகளில் இதே பிரச்னை தான் நிலவுகிறது. இதனால் மோட்டார் பம்புகள் வைத்திருப்பவர்கள் வாடகை தொகையை தாறுமாறாக உயர்த்தி விட்டனர். ஒரு மணி நேரத்துக்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை கேட்கின்றனர். பலர் இதைவிட அதிகமாக கேட்கின்றனர். ஓடிக் கொண்டிருக்கும் போதே, வேறொருவர் அதை விட அதிக தொகை தந்தால் மோட்டார் பம்பை அவர் வீட்டுக்கு எடுத்து சென்று விடுகின்றனர். தெருக்கள் சுத்தமாகி விட்டாலும் பல வீடுகளில் இதுபோன்ற நிலை இன்னும் நீடிக்கிறது. அதனால் தான் அதிக வாடகை தொகை கேட்டாலும் கொடுக்கவும் தயார் நிலையில் இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்கள்.

* கூடுதல் வாடகை என்றால் பாதியிலேயே ஆர்டர் கேன்சல்

பாதிக்கப்பட்ட ஒரு வீட்டில் மழைநீரை அகற்றிக் கொண்டிக்கும் போதே இன்னொரு ஆர்டர் வந்து, அதை விட கூடுதலான தொகைக்கு கேட்டால் உடனடியாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்டரை கேன்சல் செய்து விட்டு அதிக வாடகை தரக்கூடியவர்களின் வீடுகளுக்கு எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட வீடுகளை சேர்ந்தவர்கள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் வாடகைக்கு கிடைப்பது அரிதாகிவிடும் என்பதால் அதைவிட வாடகையை உயர்த்தி தருகிறோம் என கூறி மோட்டார் பம்ப் மூலம் மழைநீரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பலர் வாடகை மோட்டார் பம்புகள் கிடைக்காமல் கடந்த 4 நாட்களாக அலைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதே நிலைமை பல அடுக்குமாடி குடியிருப்புகளில் நீடித்து வருவதால் பார்க்கிங் ஏரியாவில் 2 அடிக்கு மேல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கூடிய மழைநீரை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இப்படி தேங்கி நிற்கும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் மட்டுமே வெளியேற்ற முடியும். தானாக வடிவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் மோட்டார் பம்புகளை தேடி அலைபவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

The post வீடுகளில் தேங்கிய மழைநீரை அகற்ற வாடகை மோட்டார் பம்புகள் கிடைக்காமல் மக்கள் அவதி: ‘டிமாண்ட்’ என்பதால் எகிறிய வாடகை appeared first on Dinakaran.

Related Stories: