சென்னையில் வரலாறு காணாத கனமழை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ரத்து: ரயில்வே துறை சார்பில் உதவி எண் அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயலால் நேற்று தென்மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் 52க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் மூழ்கியுள்ளன. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வரும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், மதுரை – சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், கொல்லம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், கன்னியாகுமரி – சென்னை எக்ஸ்பிரஸ், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி – சென்னை நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி – சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ், விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ், மதுரை – டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ், குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய 52க்கும் மேற்பட்ட ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. .

இதே போன்று சென்னைக்கு வரவேண்டிய நீலகிரி, சேரன், போடிநாயக்கனூர், ஆலப்புழா, காவேரி, காச்சிகுடா, பெங்களூரு, ஏற்காடு, பாலக்காடு, கொல்லம் ஆகிய அதிவிரைவு ரயில்கள், திருவனந்தபுரம் சென்ட்ரல் மெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. நெல்லை வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முன்பதிவு செய்திருந்த பயணிகள் கவுன்டர்களில் பணத்தை திரும்ப பெற்றுச் சென்றனர். நெல்லையில் இருந்து ஈரோடு, மும்பை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் நேற்று வழக்கம்போல் இயக்கப்பட்டன. இது மட்டுமல்லாமல் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்னைக்கு வர வேண்டிய பல ரயில்கள் சென்னையின் புறநகர் பகுதிகளான அரக்கோணம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக, சில ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னைக்கு புதிதாக வந்த பயணிகள் மற்றும் வயதானவர்கள் குழம்பி

* சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து

கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட ரயில் மெதுவாக ஊர்ந்து சுமார் 6 மணிக்குத்தான் எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. தண்டவாளங்களில் வெள்ளம் அதிகளவில் சூழ்ந்ததால் முன்னெச்சரிக்கை காரணமாக அனைத்து ரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டன. மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என அனைத்து மின்சார ரயில்களும் காலை 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாகவும், மழை மற்றும் சேத விவரங்களை பொறுத்து ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அனைத்து புறநகர் ரயில் சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சார ரயில்கள் அனைத்து வழித்தடத்திலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மின்சார ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த வழித்தடங்களில் உள்ள பயணிகள் சிறப்பு ரயில் சேவை மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* ரயில்வே உதவி எண்கள் அறிவிப்பு

சென்ட்ரல் 044-25330714,

* தண்ணீர் செல்ல முடியாத நிலை

பேசின்பிரிட்ஜ் அருகில் பக்கிங்ஹாம் கால்வாய் இணைப்பு கால்வாயான கேப்டன் கால்வாயில் சமீபத்தில் தெற்கு ரயில்வே சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. அகலமாக இருந்த கால்வாயில் குழாய்கள் பதிக்கப்பட்டு குறுகிய கால்வாயாக மாற்றப்பட்டது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

* வியாசர்பாடி-வியாசர்பாடி ஜீவா இடையே வள்ளலார் கோயில் அருகே ஜெம்பு குட்டையை ரயில்வே துறை மண்ணை கொட்டி மூடியதால் தண்ணீர் தேங்குகிறது.

* வந்தே பாரத் ரயில் போன்ற ரயில்களை அதிவேகமாக இயக்குவதற்காக ரயில் பாதையின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் தண்டவாளங்களில் உள்ள தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

The post சென்னையில் வரலாறு காணாத கனமழை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ரத்து: ரயில்வே துறை சார்பில் உதவி எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: