அரசு கல்லூரி மாணவர்களுக்கு ₹6.45 கோடியில் அடுக்குமாடி விடுதி

தர்மபுரி, டிச.3: தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ₹6.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி விடுதி கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 6ம் தேதி காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளதையொட்டி, விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்தார். தர்மபுரி அரசு கலைக்கல்லூரி 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கல்லூரி தொடங்கி 59 ஆண்டுகளாகின்றன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 18 வகையான இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.

தவிர 6 வகையான ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. இக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம், வேதியியல், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், தாவரவியல், புள்ளியியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிகாம் கூட்டுறவு, வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு (சிஏ), பிபிஏ வணிக நிர்வாகவியல், அறிவியல், பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய இளங்கலை பாடப்பிரிவுகளில் 2 ஷிப்ட் அடிப்படையில் நடைபெறுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் இக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,644 இடங்களுக்கு 14,250 பேர் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

ஒரு இடத்திற்கு 11 பேர் என்ற கணக்கில் போட்டியிட்டு விண்ணப்பித்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் வரை சேர்க்கைக்கான கவுன்சிலிங், இக்கல்லூரியில் நடந்தது. மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடப்பதால், இக்கல்லூரியில் சேர்க்கைக்கு எப்போதும் கடும் போட்டி நிலவுகிறது. அதுபோல், இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக தனித்தனியாக தங்கும் விடுதி வசதி உள்ளது. கல்லூரியின் அருகே மாணவிகள் விடுதி உள்ளது. மாணவர்களுக்கு கல்லூரியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஒட்டப்பட்டியில் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதி உள்ளது.

இந்த விடுதி பழுதடைந்து விட்டதால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ₹6.45 கோடி மதிப்பீட்டில் புதியதாக விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 400 மாணவர்கள் தங்கும் வகையில் கீழ்தளம், மேல்தளம் என இரண்டு அடுக்கு மாடியாக விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதி இரண்டு பிரிவுகளாக கட்டி முடித்துள்ளனர். 28 அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு அறையில் 20 மாணவர்கள் தங்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 62 கழிப்பறைகளும், 62 குளியலறைகளும் உள்ளன. வரும் 6ம்தேதி சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய மாணவர் விடுதியை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் நேற்று விழா முன்னெற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடுதியின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாடகை வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். பின்னர் நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டிடத்தின் சாலையோர பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கூறுகையில், ‘தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி ஒட்டப்பட்டியில் 2 ஏக்கரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ₹6.45 கோடி மதிப்பீட்டில் 2 அலகுகளாக கட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் விடுதி கட்டிடத்தை வரும் 6ம்தேதி தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். அன்று மாலையே மாணவர்களை விடுதியில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார். கலெக்டரின் இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சாகுல்அமித், தாசில்தார்கள் பார்வதி, சரவணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post அரசு கல்லூரி மாணவர்களுக்கு ₹6.45 கோடியில் அடுக்குமாடி விடுதி appeared first on Dinakaran.

Related Stories: