ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே ஆர்ச் வடிவ பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்த நிலையில் குறுகலாக இருந்த பழைய பவானி ஆற்று பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கடந்த 1987ம் ஆண்டு பழைய ஆற்று பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு அப்பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பவானி ஆற்று பாலம் வலுவிழந்ததால் அப்பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து நடைபெறவில்லை.
இந்நிலையில் திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பவானி ஆற்று பாலம் வழியாக தற்போது அதிகளவிலான வாகனங்கள் கடந்து செல்வதால் ஆற்று பாலம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பவானி ஆற்று பாலத்திற்கு பதிலாக கூடுதலாக புதிய பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பழைய பாலத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.11.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2022ல் டெண்டர் விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2023 ஜனவரி மாதம் பழைய பாலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தற்போது பவானி ஆற்றில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பவானி ஆற்றில் செல்லும் தண்ணீரை ஒரு புறமாக திருப்பி விட்டு மற்றொருபுறத்திலிருந்து வட்ட வடிவிலான ராட்சத கான்கிரீட் தூண் அமைக்கும் பணி நடந்தது. பவானி ஆற்றின் குறுக்கே 6 தூண்கள் கட்டப்பட்டு, 11 மீட்டர் அகலத்தில் பாலத்தின் மேற்பகுதி கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இரண்டொரு மாதங்களில் பாலம் கட்டுமான பணி நிறைவடைந்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது: சத்தியமங்கலம் நகர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சி ஊர்வலங்கள், திருவிழா சமயங்களில் அதிக வாகன போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்தோம். இந்நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே இருந்த பழைய பாலத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டால் ஆற்று பாலம் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்து மற்றும் லாரி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி சென்றுவர ஏதுவாக அமையும் எனவும், புதிய பாலம் கட்டி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை குறைத்த தமிழக அரசுக்கு சத்தியமங்கலம் பகுதி வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சத்தியமங்கலம் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.11.77 கோடி செலவில் பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்: இரண்டொரு மாதங்களில் கட்டுமான பணி நிறைவடையும் appeared first on Dinakaran.
