தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று காலை முடிவுக்கு வந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் பயங்கர தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் தொடங்கியது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளில் தலையிட்டு போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தி வந்தன. இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், நவம்பர் 24ம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ஒவ்வொரு நாளும், இஸ்ரேல் 30 பாலஸ்தீனியர்களை விடுவித்தது. இதற்கு ஈடாக ஹமாஸ் 10 இஸ்ரேலிய பிணை கைதிகளை விடுவித்து வந்தது.

நேற்று முன்தினம் காலை இந்த தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வர இருந்த நிலையில் வியாழன்று மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் நீட்டிப்பு நேற்று காலை முடிவடைந்தது. இதனையடுத்து சுமார் அரை மணி நேரத்தில் தெற்கு காசா மீது இஸ்ரேல் போர் விமானாங்கள் பயங்கர தாக்குதல் நடத்தின. வடமேற்கு காசா நகரத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் , ‘‘காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுக்களை ஏவி தாக்குதல் நடத்தியது உட்பட, ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமரின் அலுவலக அறிக்கையில், ‘‘போரின் இலக்கை அடைவதில் இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது. பிணை கைதிகளை விடுவித்தல், ஹமாஸை அழித்தல் மற்றும் காசா இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதிபடுத்தலே இஸ்ரேலின் இலக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு வார போர் நிறுத்தத்தின்போது ஹமாஸ் மற்றும் காசாவில் இருக்கும் தீவிரவாத அமைப்புக்கள் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்து 240 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பாக, இஸ்ரேல் 30 பாலஸ்தீனியர்களை விடுவித்தது.

* பேச்சுவார்த்தைக்கு முயற்சி
இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதாக எகிப்துடன் சேர்ந்து மத்தியஸ்தராக செயல்படும் கத்தார் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு துறை அமைச்சகத்தின் அறிக்கையில், ‘‘இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த விதிகளை மீறியதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுகின்றன. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து நடத்திய தாக்குதலானது மத்தியஸ்த முயற்சிகளை சிக்கலாக்குகிறது. சர்வதேச சமூகம் வன்முறையை நிறுத்த விரைந்து செயல்பட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: