தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: வேட்டி சட்டை, புடவை, சுடிதாருக்கு மட்டும் அனுமதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். பெரியகோயிலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளிமாநில பக்தர்கள் ஆண்களும், பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

இதனை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகையை பெரியகோயில் நுழைவாயிலில் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் வேட்டி சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறிவிப்பு பலகையை கண்டவுடன் உடனே கடைக்கு சென்று பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் பெண்கள் புடவைகள் அணிந்து கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனைக்கண்ட சக பக்தர்கள் அவர்களை பாராட்டினர்.

The post தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: வேட்டி சட்டை, புடவை, சுடிதாருக்கு மட்டும் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: