மனிதநேயம் மரணிக்கவில்லை… தண்டவாளத்தில் உயிருக்கு போராடிய வாலிபர் ரயிலை நிறுத்தி காப்பாற்றிய லோகோ பைலட்

சேலம்: சேலம் அருகே ரயிலில் அடிபட்டு தண்டவாள பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாலிபரை ரயிலை நிறுத்தி லோகோ பைலட் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோலார்பேட்டை-ஈரோடு பணிகள் ரயில் (06845) நேற்று காலை 6.40 மணியளவில் தொட்டம்பட்டி ரயில்வே ஸ்டேஷனை கடந்து மொரப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலை லோகோ பைலட் அருண்குமார் (37) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது ரயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்த அருண்குமார், உடனடியாக ரயிலை நடுவழியில் நிறுத்தி பயணிகள் உதவியுடன் அந்த வாலிபரை ரயிலில் ஏற்றினார். பிறகு ரயிலை எடுத்துக் கொண்டு மொரப்பூருக்கு வந்தடைந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெங்கடாசலத்திடம் காயமடைந்த வாலிபரை ஒப்படைத்து, மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.

இதையடுத்து அந்த வாலிபரை, அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸ் எஸ்ஐ கோபண்ணா தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அதில் ரயில்வே தண்டவாளம் அருகே காயமடைந்து கிடந்தவர், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள தெற்கு பணம்பில்லா நகரை சேர்ந்த கர்ணன் மகன் சதீஷ் (30) என்பது தெரியவந்தது.

இவரது மனைவி, சென்னையில் வசிக்கிறார். எர்ணாகுளத்தில் வேலை பார்க்கும் அவர், விடுமுறை எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு ரயிலில் சென்னைக்கு சென்றுள்ளார். மொரப்பூரை அடுத்து செல்லும்போது ரயில் படிக்கட்டில் பயணம் செய்து, கீழே தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதையடுத்து சதீசின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். லோகோ பைலட்டின் இந்த செயல் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அருண்குமாரையும், அவருக்கு உதவிய பயணிகளையும் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

The post மனிதநேயம் மரணிக்கவில்லை… தண்டவாளத்தில் உயிருக்கு போராடிய வாலிபர் ரயிலை நிறுத்தி காப்பாற்றிய லோகோ பைலட் appeared first on Dinakaran.

Related Stories: