கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக புகார் திரிணாமூல் எம்பிக்கு எதிராக சிபிஐ விசாரணை

புதுடெல்லி: லஞ்சம் வாங்கிய புகாரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், மஹுவா இந்தியாவில் இருந்தபோது அவரது நாடாளுமன்ற லாகின் ஐடி துபாயில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய தகவல் மையம்(என்ஐசி) விசாரணை அமைப்புகளிடம் தந்துள்ளதாகவும் நிஷிகாந்த் துபே தெரிவித்திருந்தார். மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டிருந்தார்.

மஹுவா கடந்த 2ம் தேதி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் மஹுவா மொய்த்ராவிடம் சிபிஐ முதற்கட்ட விசாரணையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “இது மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் முழு அளவிலான விசாரணைக்கு தகுதியானதா என்பதை கண்டறிவதற்கான முதல்படி. தகுதியானது என கண்டறியப்பட்டால் மொய்த்ரா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்” என்றனர்.

The post கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக புகார் திரிணாமூல் எம்பிக்கு எதிராக சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: