திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் ரூ.61.75 கோடியில் புதிய மேம்பாலம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

 

திண்டுக்கல், நவ. 25: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் ரூ.61.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை அமைச்சர்கள் நேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, பழநி எம்எல்ஏ இ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் மணக்காட்டூர் பாலகிருஷ்ணாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் ரூ. 61.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். திண்டுக்கல் மணக்காட்டூர் சாலை பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு பாலம் அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் ஏழு வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் பணிகள் நிலுவையில் இருந்தது. தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டு சாலைகள் விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் வீடுகளின் மதிப்பீட்டுக்குண்டான நிதியை உடனடியாக வழங்கி, மேலும் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இரவு பகலாக பணிகள் நடைபெற்று நிறைவடைந்தது இப்பாலம் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இதன் மூலம், திண்டுக்கல்லில் இருந்து செங்குறுச்சி, அதிகாரிப்பட்டி, திருமலைகேணி மற்றும் மணக்காட்டூர் செல்லும் வானங்கள் மேம்பாலத்தை பயன்படுத்தி விரைவாக செல்லலாம். விழாவில், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், மாவட்ட எஸ்பி பாஸ்கரன், சென்னை தலைமை பொறியாளர் பாலமுருகன், மதுரை கண்காணிப்பு பொறியாளர் ஜவஹர் முத்துராஜ், மதுரை கோட்டப் பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் ரூ.61.75 கோடியில் புதிய மேம்பாலம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: