குன்னூரில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர், எம்பி ஆய்வு

 

ஊட்டி, நவ. 24: குன்னூரில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர், எம்பி ஆய்வு மேற்கொண்டனர். குன்னூரில் மழையால் பாதிக்கப்பட்ட அப்பர் குன்னூர், உமரி காட்டேஜ், பாலவாசி பங்க், முத்தாலம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், எம்பி ராசா ஆகியோர் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து எம்பி ராசா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குன்னூரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த நிலையில் 25 பேர் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குன்னூர்-மேட்டுபாளையம் மற்றும் கோத்தகிரி-மேட்டுபாளையம் சாலைகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் மழை பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் என்னையும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரனையும் அவ்வப்போது அழைத்து ஆலோசனைகள் தெரிவித்து வருகின்றனர்.

மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை, என்றார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் ஆர்டிஒ பூஷணகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post குன்னூரில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர், எம்பி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: