தி.மலை கிரிவல பாதையில் ஒட்டுமொத்த தூய்மை பணி; தீபத்திருவிழாவிற்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வர வேண்டாம்: அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள்


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபவிழாவுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வரவேண்டாம் என்று அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நாளை மறுநாள் மகா தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பத்கர்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் வரும் 26ம் தேதி ஏற்றப்படுகிறது. அன்று சுமார் 40லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தை தரிசித்து கிரிவலம் செல்வார்கள் என தெரிகிறது.

இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கிரிவல பாதை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 14 கி.மீ. தூரம் உள்ள கிரிவல பாதை முழுவதும் தூய்மைபடுத்தும் பணி இன்று நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஒட்டுமொத்த தூய்மை பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.  நகராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 4,820 பேர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘தீபத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதில் 50 சதவீத பக்தர்கள் ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்தவர்கள்.

பக்தர்களின் வசதிக்காக நகராட்சி, நெடுஞ்சாலைதுறை, பொதுப்பணி துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் பலர் ஒட்டுமொத்த தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். கிரிவல பாதையில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவறைகளில் தண்ணீர் பிரச்னை ஏற்படாத வகையில் தேவனந்தல் கிராமத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்டுள்ளது. அதில் இருந்து ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கிரிவலம் வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது. இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபாதையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பூதநாராயண பெருமாள் கோயில் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பார்க்கிங் வசதி, குளியல் அறை, கழிப்பறை போன்றவை நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கலெக்டர் முருகேஷ், எம்பி அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் தரன், எம்எல்ஏ கிரி, நகராட்சி தலைவர் நிர்மலாவேல்மாறன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், நகராட்சி துணை தலைவர் ராஜாங்கம், கூடுதல் கலெக்டர் ரிஷப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தி.மலை கிரிவல பாதையில் ஒட்டுமொத்த தூய்மை பணி; தீபத்திருவிழாவிற்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வர வேண்டாம்: அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: