கல்லட்டி மலைப்பாதையில் விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டிகள்; விபத்து அபாயம்

 

ஊட்டி, நவ.20: கல்லட்டி மலைப்பாதையில் விதிமுறைகளை மீறும் இருசக்கர வாகன ஒட்டிகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. நீலகிரி மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான, குறுகலாகவும் மற்றும் அதிக வளைவுகளை கொண்டதாக உள்ளது. இது போன்ற சாலைகளில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை இயக்கத் தெரிவதில்லை. குறிப்பாக மிகவும் செங்குத்தாக செல்லும் கல்லட்டி சாலையில் வாகனங்களை இயக்க தெரியாமல் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது.

கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகதடுப்புகள், அபாயகரமான சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அபாயகரமாக சரிவான சாலை செல்லும் இடங்களில் கார், ஜீப், லாரி போன்ற அனைத்து வாகன ஒட்டிகளும் முதல் அல்லது இரண்டாவது கியரில் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர் வாகனங்கள் அதிகளவு விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் ஊட்டியில் இருந்து மசினகுடி நோக்கி செல்ல வெளியூர், வெளி மாநில வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு ஊட்டி நோக்கி வர மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

உள்ளூர் வாகனங்கள் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வழியாக பயணிக்கும் இருசக்கர வாகன ஒட்டிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் எதையும் கடைபிடிப்பதில்லை. கியரில் செல்ல வேண்டும் என்பது விதிமுறையை மறந்து சில இருசக்கர வாகன ஒட்டிகள் இறக்கத்தை பார்த்தவுடன் வண்டியை ஆப் செய்து விடுகின்றனர். குறுகிய வளைவுகள் உள்ள சாலையில் சிலர் இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்குகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

The post கல்லட்டி மலைப்பாதையில் விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டிகள்; விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: