பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி முதுமலையில் துவங்கியது

 

ஊட்டி,நவ.17: முதுமலை புலிகள் காப்பக உள்மண்டல பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இப்பணிகளில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 321 சதுர கி.மீ., பரப்பளவுள்ள உள்மண்டலம் பகுதியில் அமைந்துள்ள தெப்பகாடு,கார்குடி,முதுமலை,நெலாக்கோட்டை மற்றும் மசினகுடி ஆகிய 5 வனச்சரகங்களில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் படி பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது.

இதற்காக வனத்துறை ஊழியர்கள் அடங்கிய 30க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா 4 பேர் வீதம் கணக்கெடுப்பு 200 வன பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கணக்கெடுப்பில் நேரடி மற்றும் மறைமுக தடயங்கள் மூலம் ஊன் உன்னிகளின் வாழ்விட பயன்பாடுகளின் கணக்கெடுப்பு,புலி,சிறுத்தை போன்ற விலங்குகளின் இரை விலங்குகளான சாம்பார் மான்கள்,புள்ளி மான்கள், காட்டெருமைகள் போன்றவைகள் எத்தனை கூட்டங்கள் உள்ளன.

அவற்றின் உணவு, தேவையான மரங்கள், செடி,கொடிகள் குறித்த விவரங்கள், அவற்றின் வாழ்விட மதிப்பீடு, வேட்டை விலங்குகளின் எச்சம், பிணந்தின்னி கழுகுகள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்பின் மூலம் வன ஆரோக்கியம், ஊன் உன்னிகளின் உணவு தேவை சரியாக உள்ளதா, வாழ்விடங்கள் என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இக்கணக்கெடுப்பு பணிகள் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

The post பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி முதுமலையில் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: