தீர்த்தவாரி மண்டபம் கட்ட கோரி பாகூரில் கொட்டும் மழையில் பந்த்

*கடைகள் அடைப்பு – பேருந்துகள் இயங்கவில்லை

புதுச்சேரி : மூலநாதர் சுவாமி கோயிலுக்கு தீர்த்தவாரி மண்டபம் கட்ட கோரி பாகூரில் நேற்று கொட்டும் மழையிலும் பந்த் போராட்டம் நடைபெற்றது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புதுச்சேரி பாகூர் மூலநாதர் சுவாமி கோயிலுக்கு சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தீர்த்தவாரி மண்டபம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆற்று திருவிழாவின் போது, மூலநாதர் சுவாமி இந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் – நாகப்பட்டினம் புறவழிச்சாலை பணிக்காக தீர்த்தவாரி மண்டபத்தை, நெடுஞ்சாலை துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

தீர்த்தவாரி மண்டபம் இருந்த இந்த இடம் சோரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமானது என்றும், இழப்பீடு தொகை தங்களுக்கு தான் சேர வேண்டும் என அந்த கிராம மக்கள் உரிமை கோரினர். மேலும், அந்த இடத்தில் புதியதாக தீர்த்தவாரி மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கான இடத்தை கணினி மயமாக்கும்போது குருவிநத்தம் என குறிப்பிட்டிருந்தது நீக்கப்பட்டது.

அந்த ஆவணத்தில் குருவிநத்தம் கிராமத்தின் பெயரையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல், பாகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மூலநாதர் கோயிலின் பயன்பாட்டில் இருந்து வந்த தீர்த்தவாரி மண்டபம் சட்ட விரோதமாக, சோரியாங்குப்பம் கோயிலுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வல்லவன் தலைமையில் பாகூர், சோரியாங்குப்பம், குருவிநத்தம் ஆகிய 3 கிராம முக்கியஸ்தர்களுடன் கடந்த அக்.30ம் தேதி பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது, இடிக்கப்பட்ட மண்டபத்தை கட்டி கொடுக்கத்தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நிலத்திற்காக இழப்பீடு வழங்கப்படவில்லை. மேலும், மண்டபத்தை கட்டுவது என்பது அரசின் கொள்கை முடிவு. நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து சட்டவிதிமுறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தீர்த்தவாரி மண்டபத்தை உடனே கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இதனை மூன்று கிராமத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் பாகூர் கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, பொங்கல் பண்டிகை வர இருப்பதால் தீர்த்தவாரி மண்டபத்தை உடனடியாக கட்ட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும், அரசு சார்பில் எந்தவித அறிவிப்பும் வராததால் நவ.14ம் தேதி பாகூரில் முழு கடையடைப்பு நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. தெற்கு எஸ்பி வீரவல்லவன் பொதுமக்களிடம் பந்த் போராட்டத்தை வாபஸ் வாங்க கேட்டுக்கொண்டும் பொதுமக்கள் மறுத்து விட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை பாகூர் முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் அந்த பகுதி வழியாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாற்று வழியாக வில்லியனூர் பகுதியில் இருந்து வரும் பேருந்து பாகூர் அம்பேத்கர் சிலை வழியாக சென்று, அங்கு நடைபெற்று வரும் விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றன. அதேபோன்று, குருவிநத்தம் வழியாக வரும் பேருந்து பாகூர் தூக்குப்பாலம் வழியாக விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வந்தன.

இதனிடையே பாகூரில் பேருந்துக்கு காத்து நின்ற பொதுமக்களிடம் இங்கு பேருந்துகள் வராது என எச்சரித்த போலீசார் பின்னர் அவர்களை தங்களது வாகனத்தில் ஏற்றி கன்னியகோவில் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பாகூரில் கொட்டும் மழையிலும் தீர்த்தவாரி மண்டபம் கட்ட கோரி நடைபெற்ற பந்த் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post தீர்த்தவாரி மண்டபம் கட்ட கோரி பாகூரில் கொட்டும் மழையில் பந்த் appeared first on Dinakaran.

Related Stories: