குழித்துறை அருகே தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின் ஒயர்கள் ரயில் போக்குவரத்து பாதிப்பு

 

நாகர்கோவில், நவ.11: குழித்துறை அருகே தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்து உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே தண்டவாளத்தையொட்டி இருந்த மரம் முறிந்து விழுந்ததில், உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவும் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து அறிந்ததும் உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த போது சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த தகவல் அறிந்ததும் உடனடியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டது. மங்களூர் – எரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே நேற்று முன் தினம் இரவு ரத்து செய்யப்பட்டது.

மீட்பு குழுவினர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி அறுந்து விழுந்த உயரழுத்த மின் பாதைகளை சரி செய்தனர். மண் சரிவும் சரி செய்யப்பட்டது.  இதையடுத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இன்று காலையில் இருந்து வழக்கம் போல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. நேற்று அதிகாலையில் இயங்க வேண்டிய நாகர்கோவில் – எரநாடு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் – கொச்சுவேலி இடையே ரத்து செய்யப்பட்டது.

The post குழித்துறை அருகே தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின் ஒயர்கள் ரயில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: