ஏஞ்சலோ மேத்யூசுக்கு நேர்ந்த பரிதாபம்

இலங்கை – வங்கதேசம் அணிகளிடையே டெல்லியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தின்போது, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பேட்ஸ்மேன் தனது பேட்டிங்கை தொடங்காமல் தாமதம் செய்ததற்காக ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.இலங்கை இன்னிங்சில் 4வது விக்கெட்டாக சதீரா சமரவிக்ரமா ஆட்டமிழந்ததும் (24.2 ஓவர், 135/4), புதிய பேட்ஸ்மேனாக ஏஞ்சலோ மேத்யூஸ் சாவகாசமாக உள்ளே வந்தார். பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு முன்பாக ஹெல்மெட் அணிய முயற்சித்த ஏஞ்சலோ அதன் கம்பி உடைந்து பட்டை தனியாகத் தொங்கியதை பார்த்ததும், புதிய ஹெல்மெட் எடுத்து வருமாறு பெவிலியன் நோக்கி சைகை செய்தார்.

இதையடுத்து, மேத்யூஸ் வேண்டுமென்றே தாமதம் செய்வதாகக் கருதிய வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் வீரர்கள் நடுவரிடம் அவுட் கேட்டனர். மேத்யூஸ் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில், அவர் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்ததாக கையை உயர்த்தி அறிவித்தனர். கடுமையான வாக்குவாதத்துக்குப் பிறகும் நடுவர்கள் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள முன் வராததால், வேறு வழியில்லாமல் மேத்யூஸ் ‘விதி’யை நொந்தபடி வெளியேறினார்.ஐசிசி உலக கோப்பை 2023 விதி எண் 40.1.1ன் படி… ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி அல்லது காயம் காரணமாக ரிட்டயராகி வெளியே சென்றதும்… புதிதாக உள்ளே வரும் வீரர் அல்லது மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன் 2 நிமிடத்துக்குள்ளாக அடுத்த பந்தை சந்திக்க வேண்டும்.

அப்படி செய்யத் தவறும் பேட்ஸ்மேன் ‘டம்டு அவுட்’ முறையில் அவுட்டானதாக அறிவிக்கப்படுவார். ஹெல்மெட்டில் பிரச்னை இருப்பதை மேத்யூஸ் பார்ப்பதற்கு முன்பாகவே அவர் 2 நிமிடத்துக்கும் கூடுதலான நேரத்தை எடுத்துக் கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் இன்னிங்ஸ் இடைவேளையின்போது 4வது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் விளக்கமளித்தார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ முறையில் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ஏஞ்சலோ மேத்யூசுக்கு நேர்ந்த பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: