2 நாள் சிறப்பு முகாம்!: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்.. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவிப்பு..!!

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த மாதம் சென்னை தலைமை செயலகத்தில் அடுத்தாண்டு நடைபெறக்கூடிய தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு வெளியிட்டார். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், நீக்குவதற்கும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பர் 4 மற்றும் 5ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார். அதன்படி, முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது.

ஏரளாமானோர் பங்கேற்று பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர். மேலும் ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும் பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்களை மேற்கொள்ள voter helpline app nvsp.in மற்றும் voters.eci.gov.in ஆகிய இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். 2 நாள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள 6 லட்சம் விண்ணப்பம் செய்துள்ளனர். சிறப்பு சுருக்க முறை திருத்த விண்ணப்பங்கள் வருகிற 9ம் தேதி வரை பெறப்பட்டு 2024 ஜனவரி 5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 2 நாள் சிறப்பு முகாம்!: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்.. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: