காஞ்சிபுரத்தில் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு முகாம் வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு முகாம் வாகனத்தை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில், அரசினர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம், 1969ம் ஆண்டில் அண்ணாவின் நினைவாக தொடங்கப்பட்டது. இந்நிலையம் புற்றுநோய் சிகிச்சைக்காக மட்டுமின்றி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறிதல், புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையம் தேசிய புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு, மேற்கண்ட பணிகளில் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு வட்டார மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் புற்றுநோய் கண்டறியும் முகாம் தினசரி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் காண்டறிதல் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது, இந்நிலையத்திற்கென ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும், இண்டியா யமஹா மோட்டார்ஸ் லிமிடட் நிறுவனத்தின் மூலம், அவசர ஊர்தி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தினை உபயோகப்படுத்தி, இம்முகாம் பணிகளை மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தடையின்றி சிறப்பாக நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காஞ்சிபுரம் அரசு அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார்பில், புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், அரசு அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் சரவணன், மருத்துவமனையின் நிலைய மருத்துவர் சிவகாமி, புற்றுநோய் துறை பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு முகாம் வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: