நகை வியாபாரியிடம் ₹4.10 லட்சம் மோசடி

புதுச்சேரி, அக். 31: புதுச்சேரி ராஜ்பவன் அரவிந்தர் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன் (61). அரவிந்தர் வீதி – வைசியாள் வீதி சந்திப்பில் நகை கடை வைத்துள்ளார். இவர் சேமிப்பு கணக்கு வைத்துள்ள தனியார் வங்கியில் இருந்து `செக் புக்’ கடந்த 19ம் தேதி வந்துள்ளது. தொடர்ந்து, 20ம் தேதி வைத்தியநாதனிடம் செல்போனில் தொடர்பு கொண்ட நபர், தான் வங்கி மேலாளர் சிவக்குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். அப்போது, சேமிப்பு கணக்கு புதுப்பிக்கப்படவில்லை. அதனை புதுப்பிக்கவில்லை என்றால் காலாவதியாகிவிடும். அதன்பிறகு, கணக்கை பயன்படுத்த முடியாது என்று அந்த நபர் கூறியுள்ளார்.

உண்மையில் அவர் வங்கி மேலாளர் என்று நம்பி, அவர் கேட்டபடி வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் ஓடிபி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கணக்கை புதுப்பிப்பதற்காக கூறியிருக்கிறார். பின்னர், சந்தேகம் ஏற்பட்டு தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று விசாரித்துள்ளார். விசாரணையில், வைத்தியநாதனின் வங்கி கணக்கில் இருந்து வேறு ஒரு வங்கி கணக்கிற்கு ரூ.4.10 லட்சம் முறைகேடாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் வைத்தியநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நகை வியாபாரியிடம் ₹4.10 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: