ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் போலீஸ் கமிஷனர் சந்திப்பு: கைதான ரவுடி 9ம்தேதி வரை சிறையில் அடைப்பு

சென்னை: ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். கிண்டிஆளுர் மாளிகை முன்பு பெட்ரோல் கு்ண்டு வீசியதாக தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி வினோத் (எ) கருக்கா வினோத் (40) கைது செய்யப்பட்டார். ‘சி’ கேட்டகிரி ரவுடியான இவன் மீது கடந்த 10.2.2022 அன்று தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிண்டி போலீசார் ரவுடி கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துநேற்று முன்தினம் நள்ளிரவு சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சந்தோஷ் வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் மளிகைக்கு நேரில் வந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் ராஜ்பவன் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தை தொடர்ந்து கிண்டி உதவி கமிஷனர் சிவா தலைமையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் கமிஷனர் சந்திப்புக்கு முன்பே நேற்று முன்தினம் மாலை இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஒன்றிய உளவுத்துறை ஆய்வு
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவுத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பவம் நடந்த ராஜ்பவன் முன்பு ஆய்வு செய்தனர். பிறகு உளவுத்துறை அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்பவன் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு திட்டமிட்டு செய்யப்படவில்லை என்றும், குடிபோதையில் ரவுடி ஒருவர் வீசியதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. தங்களது விசாரணை அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு நேற்று அனுப்பி வைத்துள்ளதாக உளவுத்துறை வட்டாரத்தில் தகவல் வெளியானது.

* குடும்பத்தினரிடம் விசாரணை
குண்டு வீச்சு சம்பவத்தில் கைதான ரவுடி கருக்கா வினோத்தின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களை தேனாம்பேட்டை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

* குண்டு வீசியது ஏன்? பரபரப்பு வாக்குமூலம்
ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியது குறித்து கிண்டி உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் ஆகியோர் தனியாக விசாரணை நடத்திய பொழுது ரவுடி கருக்கா வினோத், ‘‘ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதை தடுக்க சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி கொண்டு வந்த தீர்மான மசோதவுக்கு கையெழுத்து போடாமல் இருப்பது, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்கும் வகையில், ராஜ்பவன் மீது 4 குவாட்டர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் 2 பாட்டிலை தீ வைத்து வீசினேன்’’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.

* ஆளுநர் மாளிகை புகார்
தமிழக ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் போலீஸ் கமிஷனர் சந்திப்பு: கைதான ரவுடி 9ம்தேதி வரை சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: