கன்னியாகுமரியில் துணிகரம் வீட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை

*புகார் அளித்த 3 மணி நேரத்தில் கொள்ளையன் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த நபரை, புகார் வந்த 3 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் தவமணி. இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி ஜெயராணி (31). இவர் நேற்று முன் தினம் (21ம்தேதி) தனது குழந்தைகளுடன் இரவு வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார்.

நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராணி இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடிக்க எஸ்.பி. சுந்தரவதனம் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். டி.எஸ்.பி. மகேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்த போலீசார் உடனடியாக நேற்று காலையில் கன்னியாகுமரி நகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி சிலுவைநகர் சாலையில் ரோந்து வந்த போது, சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் என்ற வாமணாபுரம் பிரசாத் (59) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரிடம் சோதனை நடந்தது. இதில் அவர் வைத்திருந்த மஞ்சள் பையில் தங்க நகைகள் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தனிப்படை போலீசார் அவரை, கன்னியாகுமரி காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் ஜெயராணி வீட்டில் சுமார் 40 பவுன் தங்க நகைகளை ஹரி பிரசாத் கொள்ளையடித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 40 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர்.

புகார் வந்த சுமார் 3 மணி நேரத்தில் கொள்ளையனை கண்டுபிடித்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி. சுந்தரவதனம் பாராட்டினார். கைதாகி உள்ள ஹரிபிரசாத் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என தனிப்படை போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

The post கன்னியாகுமரியில் துணிகரம் வீட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: