சொந்த வீட்டில் இருப்பதுபோல இஸ்ரோவில் வேலை செய்கிறோம்: ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநர் பெருமிதம்

திருச்சி: இஸ்ரோவில் பணியாற்றுபவர்கள் அரசு வேலை என்று கருதாமல் சொந்த வீடு போல வேலை செய்கிறோம் என்று ஆதித்யா-எல்1 திட்ட பெண் இயக்குநர் தெரிவித்தார். திருச்சியில் டிரெக் ஸ்டெப் அமைப்பு சார்பில் 30 பெண் தொழில் முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநர் நிஹர் ஷாஜி என்ற பெண் விஞ்ஞானி பங்கேற்று பேசியதாவது: நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வளர்ந்தவள். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு எனது பெற்றோரும், இஸ்ரோ நிறுவனமும் காரணம்.

நான் படித்தது எல்லாமே அரசு பள்ளி, கல்லூரியில் தான், பெண்களாகிய நமக்கு வாய்ப்பு வந்து கதவை தட்டும்போதே அதை பயன்படுத்திகொள்ள வேண்டும். பெண்கள் நமக்கு திறமை இல்லை என்று ஒருபோதும் நினைக்க கூடாது, இஸ்ரோ என்ற திட்டத்தை செயல்படுத்திய விஞ்ஞானி விக்ரம் சாராபாயிடம் பலர் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு இந்த விண்வெளி மையம் அவசியமா என்று கேட்டனர். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் அதை செயல்படுத்தி இன்று உலகத்தில் உள்ள பெரிய விண்வெளி மையங்கள் எல்லாம் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு அடைந்திருக்கிறோம். அதற்கு காரணம் அங்கு பணியாற்றும் ஒவ்வொருவரும் அரசாங்கத்தில் பணியாற்றுவதை போல் அல்லாமல் தங்களுடைய சொந்த வீட்டில் எப்படி பணியாற்றுவார்களோ அதேபோல் பணியாற்றுகின்றனர். பெண்கள் இந்த சமுதாயத்தில் சரிசமமான அந்தஸ்து பெற வேண்டும் என்றால், அந்த மாற்றத்தை முதலில் உங்கள் வீடுகளில் தொடங்க வேண்டும். பிள்ளைகளிடம் அனைவரும் சமம் என்றும், பெண்களை மதித்து நடக்கவும் கற்றுக் கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post சொந்த வீட்டில் இருப்பதுபோல இஸ்ரோவில் வேலை செய்கிறோம்: ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநர் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: