திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ 4ம் நாள்; கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா: நாளை மாலை கருடசேவை


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி நவராத்திரி விழாவின் 3ம் நாளான நேற்று இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா வந்தார். 4ம் நாளான இன்று காலை கற்பக (கல்ப) விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ராஜமன்னார் அலங்காரத்தில் மாடவீதியில் பவனி வந்தார். கற்பக விருட்ச வாகனம் என்பது சொர்க்கத்தில் தேவர்களுக்கு கேட்கும் வரங்களை தருவது கற்பக விருட்சம். அதுபோன்று கலியுகத்தில் தன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரும் வகையில் இந்த கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வருகிறார்.

பக்தர்களின் ‘கோவிந்தா கோவிந்தா’ பக்தி முழக்கத்திற்கு மத்தியில் 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதியுலாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோலாட்டம், பஜனைகள், கிருஷ்ணர், ராமர், மகாவிஷ்ணு என பல்வேறு அவதாரத்தை விளக்கும் வேடமணிந்து வீதியுலாவில் பங்கேற்றனர். தொடர்ந்து இன்றிரவு உலகத்தில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் தானே என்பதை உணர்த்தும் விதமாக, ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்க்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரம்மோற்சவ 5ம் நாளான நாளை காலை மோகினி அலங்காரத்திலும், முக்கிய வாகன சேவையான கருடசேவை நாளை மாலை 6.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. கருட சேவையை காண இன்று காலை முதலே பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். கருடசேவையை காண 3 லட்சம் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் நாளை 19ம் தேதி காலை முதல் 20ம் தேதி காலை வரை அனுமதி இல்லை என திருப்பதி எஸ்.பி தெரிவித்தார்.

உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 72,123 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,054 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.01 கோடி காணிக்கை செலுத்தினர்.

The post திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ 4ம் நாள்; கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா: நாளை மாலை கருடசேவை appeared first on Dinakaran.

Related Stories: