உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததால் திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால் நான் சிறை செல்கிறேன் என ஆவேசம்

புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் காலம் முடிந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று திகார் சிறையில் சரணடைந்தார். டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும், மக்களவை தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது.

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறை கைதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மக்களவை தேர்தலையொட்டி கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மே 10ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக கடந்த 31ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் “இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததும், ஜூன் 2ம் தேதி நான் நிச்சயம் சரணடைவேன். என் வயதான பெற்றோர்களை பார்த்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று சிறையில் சரணடைய தனது வீட்டில் இருந்து புறப்பட்ட கெஜ்ரிவால் தன் பெற்றோர்களின் காலில் விழுந்து வணங்கினார். தொடர்ந்து தன் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தார்.

பின்னர் காரில் புறப்பட்டு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து ரோஸ் அவென்யூ சாலையில் கன்னாட் பிளேசில் உள்ள அனுமான் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் பலரும் சென்றனர். பின்னர் ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், “ஊழலில் ஈடுபட்டதற்காக அல்ல.

சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக நான் மீண்டும் சிறை செல்கிறேன். உச்ச நீதிமன்றம் எனக்கு 21 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியதற்கு நன்றி. இந்த 21 நாட்களை நான் சிறிதும் வீணாக்கவில்லை. எனக்கு ஆம் ஆத்மி கட்சி முக்கியமல்ல, கட்சிக்கு 2ம் இடம்தான். முதலில் எனக்கு நாடு தான் முக்கியம். நாட்டை காப்பாற்றுவதற்காக 21 நாள்களும் பிரசாரம் செய்தேன்” என்று கூறினார்.

இதைதொடர்ந்து நேற்று மாலை திகார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார். இதையொட்டி திகார் சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

* கருத்து கணிப்புகள் போலி
முன்னதாக ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “ஜூன் 4ம் தேதி பாஜ கூட்டணி 3வது முறை மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து கணிப்புகள் போலியானவை. ராஜஸ்தானில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகளே உள்ளது. ஆனால் ஒரு கருத்து கணிப்பில் ராஜஸ்தானில் பாஜ 33 இடங்களில் வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது. இதுவே கருத்து கணிப்புகள் போலியானவை என்பதற்கு உதாரணம்” என்று தெரிவித்தார்.

The post உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததால் திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால் நான் சிறை செல்கிறேன் என ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: