கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு நடந்துவரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

கூடுவாஞ்சேரி, அக். 15: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என்று கூறும் அளவுக்கு வாகனங்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்துநிலையம் அமைக்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டது.

அதன்படி சென்னையில் ₹400 கோடி மதிப்பில் 60 ஏக்கர் பரப்பிளவில் ஒருங்கிணைந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு, தற்போது விரைவில் திறப்பு விழா காண உள்ளது. கடந்த மாதமே திறக்கப்படும் என திட்டமிடப்பட்ட நிலையில், நடைமுறை சிக்கல் காரணமாக இதற்கான திறப்புவிழா தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்த பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர சிஎம்டிஏ அதிகாரிகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பாக தண்ணீர் தேங்கி நின்றது.

அதிகாரிகள் விரைவில் இதற்கு தீர்வு காண முடிவு செய்தனர். அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் முன்பக்கம் மழைநீர் தேங்குவதை தடுக்க ஜி.எஸ்.டி சாலையில் சிறிய பாலம் அமைத்து, அதன் வழியாக கிளாம்பாக்கம் ஏரிக்கு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக நீர் தேங்குவது முற்றிலும் தடுக்கப்படும். இந்த பணிகளின் முதற்கட்டமாக பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள சர்வீஸ் சாலையில், பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் பேருந்து நிலையத்திலிருந்து மழைநீரை வெளியேற்ற ₹17 கோடி செலவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படுகிறது. சாலையின் குறுக்கே நவீன முறையில் சிறுபாலம் அமைத்து அதில் அந்த மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா நேற்று திடீரென ஆய்வு செய்தார். அவருடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் நிலுவையில் உள்ள பணிகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்த தலைமை செயலாளர், உடனடியாக அந்த பணிகளை முடிக்க உத்தரவிட்டார். பின்னர் ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், மழைக்காலம் தொடங்குவதற்குள் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு நடந்துவரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: