கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை திருவண்ணாமலை மாடவீதியில்

திருவண்ணாமலை, அக்.13: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை இம்மாத இறுதிக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலை சுற்றியுள்ள மாடவீதியை, திருப்பதிக்கு இணையாக கான்கிரீட் சாலை அமைத்து தரம் உயர்த்தும் பணி ₹20 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. அதற்காக, விமான ஓடுதளம் அமைக்கும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி இரவு, பகலாக சாலை அமைக்கப்படுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக, பேகோபுர தெரு திரவுபதி அம்மன் கோயில் முதல் காந்தி சிலை வரையில் 1,050 மீட்டர் தூரம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. பெரிய தெரு பகுதியில் நிலுவையில் உள்ள சுமார் 105 மீட்டர் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா தொடங்குவதற்கு, இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ளதால், கான்கிரீட் சாலை பணிகளை விரைந்து முடிப்பதற்காக, பே கோபுர வீதி, பெரிய தெரு மற்றும் சின்னக்கடை தெரு ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், மாடவீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணியை கலெக்டர் முருகேஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கான்கிரீட் சாலை அமைக்கும் முதற்கட்ட பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் பே கோபுர வீதி மற்றும் பெரிய தெருவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து, மின்வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலையோர மின்கம்பங்களை அகற்றி, சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை பைப்லைன் இணைப்புகளை முறையாக கான்கிரீட் சாலைப் பகுதியில் அமைத்திட வேண்டும் என்றார். ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், மின்வாரிய செயற்பொறியாளர் ராஜமாணிக்கம், நகராட்சி உதவி பொறியளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை திருவண்ணாமலை மாடவீதியில் appeared first on Dinakaran.

Related Stories: