நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து வாடகை வசூல் செய்த உரிமையாளர் அதிரடியாக அகற்றிய அதிகாரிகள்

பள்ளிகொண்டா, அக்.11: பள்ளிகொண்டா அருகே நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உரிமையாளர் வாடகை வசூல் செய்து வந்த நிலையில் அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஒருவழிச்சாலையான இங்கு எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். சாலையோரம் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கடை எதிரில் நிழலுக்காக இருபுறமும் நெடுஞ்சாலைதுறை இடத்தை ஆக்கிரமித்து இரும்பு தகடுகளால் ஆன ஷீட்கள் அடித்து பயன்படுத்தினர். இதனால், கடைகளின் வாசல்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் சாலை வலது புறம் ஒரு ஓட்டல் கடை வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர் நெடுஞ்சாலை துறை இடத்தை ஆக்கிரமித்து பேவர்பிளாக் கற்களை பதிக்க முயன்றார். ஏற்கனவே தனக்கு சொந்தமான கடையை சுற்றியுள்ள நெடுஞ்சாலை துறை இடத்தை ஆக்கிரமித்து கடைகளுக்கு தனித்தனியாக விட்டு வாடகை வசூல் செய்து வந்தார். இதுகுறித்து அருகேயுள்ள கடைக்காரர்கள் வருவாய் துறையினருக்கும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் கடையின் எதிரே ஆக்கிரமிப்பு செய்ய வைத்திருந்த பேவர்பிளாக் கற்களை அகற்றி கடையின் விளம்பர பதாகைகளையும் அகற்றினர். இதேபோல் தொடர்ந்து குடியாத்தம் சாலையில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆக்கிரமிப்பு செய்யும் கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

The post நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து வாடகை வசூல் செய்த உரிமையாளர் அதிரடியாக அகற்றிய அதிகாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: