பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறிவது எப்படி? தோட்டக்கலை அதிகாரிகள் விளக்கம்

வேலூர், மே 19: பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம். இதன் குறைபாடுகளை கண்டறிவது எப்படி என தோட்டக்கலை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பயிர்கள் ஆரோக்கியமாக வளரவும், அதிக மகசூலை பெறவும் விவசாயிகள் உரங்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு வகை பயிருக்கும், ஒரு வகை சத்து அதிகளவு தேவைப்படுவதால் உரம் பயன்பாடு விவசாயிகளுக்கான சவாலான விஷயமாக மாறியுள்ளது. ஒவ்வொரு வகை மண்ணிலும் சில சத்துக்கள் அதிகமாகவும், குறைவாகவும் காணப்படும். இதில் எந்த சத்து குறைவாக உள்ளது என கண்டறிந்து உரமிட வேண்டும். பயிரில் காணப்படும் அறிகுறிகளை கொண்டு சத்துக்குறைபாட்டை கண்டறிவது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது: பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் குறிப்பிட்ட விகித அளவுகளில் தேவைப்படுகின்றன. இதுவே சமச்சீர் கூட்டம் எனப்படுகிறது. மண்ணில் தழைச்சத்து மற்றும் மணிச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்போது பயிரின் முதிர்ந்த இலைகளில் உள்ள தழைச்சத்து இளம் தழைகளுக்கு எளிதில் நகர்ந்து சென்று விடுகிறது. எனவே முழு வளர்ச்சி அடைந்த செடிகளில் ஒரே நேரத்தில் இளம் இலைகள் வெளிர் பழுப்பு நிறுத்திலும், நடுப்பகுதி இலைகள் வெளிர் மஞ்சள், வெளிர் பழுப்பு நிறத்திற்கும் மாறிவிடும். சாம்பல் சத்து குறைபாடுள்ள பயிரில் இடைக்கணுக்கள் குட்டையாக குறுகி காணப்படுவதுடன் பசுமை இழந்து விடும். சுண்ணாம்புச்சத்து குறைபாடு உள்ள பயிர் வளர்ச்சி குன்றி, குட்டையாக தடித்த தண்டுகளுடன் காணப்படும். இந்த அறிகுறிகளை கொண்டு எவ்வகை சத்து குறைவாக உள்ளது என்பதை கண்டறிந்து, அவ்வகை சத்தை வழங்கும் உரங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறிவது எப்படி? தோட்டக்கலை அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: