மாநகராட்சி பள்ளியில் ரூ.61 லட்சம் செலவில் “ஹைடெக் லேப்”

*விரைவில் மாணவர் பயன்பாட்டிற்கு வருகிறது

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி பள்ளியில் ரூ.61 லட்சம் செலவில் ஹைடெக் லேப், நூலகம் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமான பணி முடிக்கப்பட்டுள்ளதையடுத்து விரைவில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இதே போல தகுதி வாய்ந்த பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றது. மேலும் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவிகளை கவுரப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு கொல்லம்பாளையம், ரயில்வேகாலனி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், கூடுதல் வகுப்பறைகள், நூலகத்திற்கு என அறை மற்றும் கணினி ஆய்வகம் ஆகியவை கட்டித்தர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ திருமகன் ஈவெரா தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.61 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தயார் நிலையில் உள்ளது. இந்த புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டால் வகுப்பறை இட நெருக்கடி வெகுவாக குறையும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கொல்லம்பாளையம், ரயில்வே காலனி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தேன்மொழி கூறியதாவது, பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வந்தனர். ஆனால் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 1060 பேர் படித்து வருகின்றனர்.

இதையடுத்து மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கான கூடுதல் கட்டிடம் வேண்டுமென்று கேட்டிருந்தோம். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ நிதியின் கீழ் ரூ.61 லட்சம் செலவில் கணினி ஆய்வகம், நூலகம், வகுப்பறை ஆகியவை கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

பிளஸ்- 1, பிளஸ்- 2 ஆகிய வகுப்புகளில் கம்ப்யூட்டர் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 340 ஆகும். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினி ஆய்வகத்தில் இட வசதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது கணினி ஆய்வகத்திற்கு என்று தனியாக அறை கட்டப்பட்டுள்ளதால் இனி இட நெருக்கடி இருக்காது. ஏற்கனவே பள்ளியில் 20 கம்ப்யூட்டர்கள் கொண்ட ஐசிடி லேப் உள்ளது. புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் போது, ஐசிடி லேப் மேலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

The post மாநகராட்சி பள்ளியில் ரூ.61 லட்சம் செலவில் “ஹைடெக் லேப்” appeared first on Dinakaran.

Related Stories: