வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு: கோரிக்கை மனுவை அளித்தார்

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பேசினார் பாமக தலைவர் அன்புமணி. அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அவர் அளித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி, நேரில் சந்தித்து வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். இந்த நிகழ்வின்போது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

பின்னர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வருக்கு 6 முறை கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வரிடம் மீண்டும் நேற்று கோரிக்கை மனு அளித்தோம். மேலும் எங்களின் கோரிக்கைக்கு முதல்வர் ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறினார். மேலும் வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்குவதற்கான தரவுகளை திரட்டி வருவதாகவும் முதல்வர் கூறினார்.

அதேபோல், வன்னியர் இடஒதுக்கீடு என்பது சாதி பிரச்னையல்ல, சமூக நீதி பிரச்னை. கல்வியில், பொருளாதாரத்தில், வேலை வாய்ப்பில் பின் தங்கிய மாவட்டங்களாக வடமாவட்டங்கள் இன்றளவும் உள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். தற்போது பீகாரை விட மக்கள் தொகை குறைவான தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை எளிதாக நடத்த முடியும். அதன்படி திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே ஆக வேண்டும்.

மேலும், காவிரி பிரச்னை என்பது விவசாய பிரச்னை மட்டுமல்ல, சென்னை உட்பட தமிழகத்தில் 22 மாவட்டங்கள் குடிநீருக்கு காவிரி நீரையே சார்ந்து உள்ளன. கர்நாடகத்தின் 4 பெரிய அணைகளையும், மேட்டூர் அணையையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். கர்நாடகா யார் சென்னாலும் கேட்கும் நிலையில் இல்லை. எனவே, காவிரி தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்‌. இவ்வாறு அவர் பேசினார்.

The post வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு: கோரிக்கை மனுவை அளித்தார் appeared first on Dinakaran.

Related Stories: