மானாமதுரை: மானாமதுரையில் காவல் தெய்வமான எல்லைப்பிடாரி அம்மனுக்கு புரட்டாசி மாத உற்சவ விழா நேற்று துவங்கியது. மானாமதுரை நகர் துவங்கும் அண்ணா சிலை ரயில்வேகேட் அருகே எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. நகர் உருவான காலம் முதல் பலநூறு ஆண்டுகள் கடந்த இந்த புராதானமான கோயிலில் உள்ள பிடாரியம்மன் எல்லைப்பிடாரியம்மன் என்று வழிபடப்பட்டு வருகிறது.மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதிகளை சேர்ந்த கஸ்பா கிராமத்தினர் ஆண்டுதோறும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் கால்நடைகள், மனிதர்களுக்கு நோய் நொடிகளின்றி வாழவும் புரட்டாசி மாதம் அம்மனுக்கு சிறப்பு படையல்கள் செய்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் காப்பு கட்டி விரதம் இருந்து தங்கள் பகுதியில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் கோவில் பூசாரிகள் உதவியுடன் கொடியேற்றி விழாவை தொடங்கினர். ஏழுநாட்கள் தினமும் நடக்கும் இந்த விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான வரும் செவ்வாய்க்கிழமை பெண்கள் மாவிளக்கு, ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளால் தயார் செய்யப்பட்ட சட்டிசோறு எடுத்து வரும் நிகழ்ச்சி விமரிசையாக கொண்டாடப்படும். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணராஜபுரம் பொதுமக்களும், விழா கமிட்டியினரும் செய்து வருகின்றனர்.
The post எல்லைப்பிடாரி அம்மன் கோயில் புரட்டாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.