ஊட்டி, அக். 4: நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான டேவிஸ் பூங்கா கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. இப்பூங்கா 1.38 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவை தனியார் அமைப்பு பராமரிப்பு வந்த நிலையில், காலபோக்கில் பராமரிக்காமல் விட்டு விட்டதால் முட்புதர்கள் வளர்ந்தும், தடுப்பு வேலிகள் சேதமடைந்தும் பொலிவிழந்து காட்சியளித்தது. இதனால் குடிமகன்கள் மது அருந்தும் இடமாக மாறியது. மேலும், குதிரைகள், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் மாறியது. இப்பூங்காவை மேம்படுத்தி பள்ளி மாணவ, மாணவியர், அக்கம் பக்கம் உள்ள குடியிருப்புவாசிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு பணிகள் துவங்கின. கால்நடைகள் நுழையாதவாறு பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. தொடர்ந்து நீருற்று, 20 மின்கோபுரங்கள், தண்ணீர் வசதி, நடைபாதை வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டது. குழந்தைகள் விளையாடி மகிழ வசதியாக ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டன.
இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இவற்றை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சேர்மக்கனி, துணை தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி எம்பி ராசா பங்கேற்று பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ரூ.91 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட டேவிஸ் பூங்கா திறப்பு appeared first on Dinakaran.
