மலைக்கிராமத்திற்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்

 

கூடலூர்,அக்.2: தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிகொல்லி,பேபி நகர்,ஒற்றுவயல்,காரக குன்னு,மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் வரும் ஒற்றைக் காட்டு யானை விவசாயிகளின் பயிர்களையும், உடைமைகளையும் சேதப்படுத்தி வருகிறது.பலாப்பழ சீசன்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பல இடங்களில் விவசாயிகளின் பலாமரங்களை வனத்துறையினர் வெட்ட வைத்ததோடு பலாப்பழங்களையும் அங்கிருந்து பறித்துச் சென்றனர்.நேற்று முன்தினம் இரவு பேபி நகர் பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டுயானை அங்கு வசிக்கும் ஆதிவாசி மீனாட்சி என்பவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த இரண்டு பிளாஸ்டிக் டிரம்களை உடைத்து சேதப்படுத்தியது.

அருகில் உள்ள விவசாயி ஜோஸ் என்பவரது இரண்டு தென்னை மரங்களையும் சாய்த்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த யானையின் நடமாட்டம் காரணமாக இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாலை நேரத்தில் ஊருக்குள் வரும் இந்த காட்டு யானை அதிகாலை வரை ஊருக்குள் சுற்றித்திரிகிறது. அருகிலுள்ள முதுமலை வனப்பகுதியில் இருந்து வரும் இந்த காட்டு யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்க அகழி மின்வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையிலும் இதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாததால் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post மலைக்கிராமத்திற்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: