ஊட்டி, செப்.29: நீலகிரியில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மாறும் காலநிலையால் பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் இரவில் நீர்ப்பனியும் காணப்படுகிறது. மேலும், பகலில் வெயிலும், மாலை நேரங்களில் குளிரும் என மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் காற்று வீசுவதால் சளி, காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற தொற்றுக்களால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த மாறுபட்ட காலநிலை ஒரு புறம் இருக்க பெரும்பாலான பகுதிகளில் உள்ளாட்சிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் முறையாக குளோரினேசன் செய்யப்பட்டு வழங்கப்படுவதில்லை. இதனால், இந்த தண்ணீரை காய்ச்சாமல் குடிக்கும் பலரது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளுக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது அவசியம். மேலும், சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது அவசியம். காலநிலை மாற்றம் ஏற்படும் போது தண்ணீர் காய்ச்சி குடிப்பதன் அவசியம், குளோரின் செய்யப்பட்ட தண்ணீர் குடிப்பது, வெம்மை ஆடைகள் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவதும் அவசியம் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நீலகிரியில் அடிக்கடி மாறும் காலநிலை சளி, காய்ச்சலால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.