வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் மாவட்டத்தில் 35 ஊராட்சிகளில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம்

ஊட்டி, செப்.28: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய வட்டாரங்களில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் 35 ஊராட்சிகளில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் தேன் எடுத்து விற்பனை செய்து வரும் காட்டுநாயக்கர் பழங்குடியின மக்களிடம் கலெக்டர் உற்சாகமாக உரையாடினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட மாவட்ட பணிக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தி வரும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டமானது ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் ஆகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய வட்டாரங்களில் 35 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தொழில் செய்து வருவோர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கும் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த தொழில் முனைவோரை கண்டறிந்து தொழில் குறித்து ஆலோசனைகள் மற்றும் வணிக திட்டம் தயாரித்தல் போன்ற ஆலோசனை வழங்கப்பட்டு மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலமாக தொழில் திறன் அடிப்படையில் இணை மானிய நிதி திட்டம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்று தரப்படுகிறது.

வட்டார மற்றும் மாவட்ட தேர்வுக்குழு மூலமாக தொழில் முனைவோர்களுக்கு கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ள நபர்கள் இணை மானிய நிதி வங்கி கடன் வழங்க தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட கடன் பெறும் பயனாளிகளிடம் அவர்கள் மேற்கொள்ளவுள்ள தொழில் குறித்து கலெக்டர் அருணா நேர்காணல் நடத்தினார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட வட்டார மற்றும் மாவட்ட பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அதில் நுண் தொழில் கடன் நிதி குறித்தும், இணை மானிய நிதி திட்டம் நுண், குறு, சிறு தொழில் கடன் இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளி பயிற்சி நிலை, உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் ஆண்டு மொத்த வருமானம் ஆகியவற்றையும் கலெக்டர் கேட்டறிந்தார். தேன்கொல்லி கிராமம் காட்டுநாயக்கர் பழங்குடியின தொழில் குழுவிற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாநில அலுவலகத்தில் இருந்து பழங்குடியினர் சிறப்பு நிதி பெற்று தேன் எடுத்தல் மற்றும் சுத்தம் செய்தல் அவற்றை விற்பனை செய்வது குறித்தும் உற்சாகமாக உரையாடினார்.

இதைத்தொடர்ந்து தொழில் முனைவோர்களுக்கு இணை மானிய நிதி கடனுதவி வழங்கப்பட்டது. கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட செயல் அலுவலர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கரபாணி, மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் மாவட்டத்தில் 35 ஊராட்சிகளில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: