கண்டிமட்டம் பகுதி பொதுமக்கள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

மஞ்சூர், செப்.28: கண்டிமட்டம் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சி மாதாந்திர மன்றக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் நேரு வரவேற்றார். இதைத்தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பெரும்பாலான கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதத்தில் ஈடுபட்டார்கள். இதைத்தொடர்ந்து, கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட கண்டிமட்டம் பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை முன்னிட்டு கண்டிமட்டம் பகுதியில் புதிய குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து அம்மக்கல் தடுப்பணையில் இருந்து கண்டிமட்டம் பகுதி வரை குடிநீர் குழாய்கள் அமைத்து பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல காந்திபுரம், பூதியாடா கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்கள் பழதடைந்துள்ளதால் இந்த குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைக்கப்படும். மட்டகண்டி பகுதியில் சட்ட விதிகளை மீறி கட்டி வந்த கட்டிடத்திற்கு மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதுடன் சட்ட விதிகளை மீறி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

மேலும் மஞ்சூர் சுற்றுவட்டார வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 30 கிராமங்கள் மற்றும் குந்தா, பிக்கட்டி, எடக்காடு, எமரால்டு, கிண்ணக்கொரை, அப்பர்பவானி, பெங்கால்மட்டம், மஞ்சகம்பை, கெத்தை போன்ற சுற்றுலா பகுதிகளை காண கேரளா பகுதிகளில் இருந்து முள்ளி வழியாக வரும் பயணிகளை முள்ளி சோதனைச்சாவடியில் தடுக்காமல், அனுமதி வழங்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் மாடக்கன்னு நன்றி கூறினார்.

The post கண்டிமட்டம் பகுதி பொதுமக்கள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: