தந்தையிடம் பயிற்சி: வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை அடுத்த சலமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (56), இவரது மனைவி ராஜேஸ்வரி (45). சரவணன் ராணுவத்தில் மெட்ராஸ் இன்ஜீனியரிங் குரூப் ரெஜிமென்டில் பாய்மரப் படகு வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு விஷ்ணு சரவணன் (23) என்ற மகனும், ரம்யா சரவணன் (21) என்ற மகளும் உள்ளனர். சரவணன் பாய்மர படகு பயிற்சியாளராக இருந்ததால் தனது பிள்ளைகளுக்கும் 6 வயதில் இருந்தே படகு ஓட்டும் பயிற்சியை அளித்து வந்தார்.
இதனால் அண்ணன், தங்கை இருவரும் மிகச்சிறந்த பாய்மர படகு ஓட்டும் வீரர்களாக தேசிய அளவிலும், ஆசிய மற்றும் உலக அளவிலும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளனர். விஷ்ணு தனது 17 வயதிலேயே விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் எம்ஈஜி ராணுவ படைப்பிரிவில் நேரடியாக ஜேசிஓ நாயப் சுபேதார் ரேங்க் ராணுவ அதிகாரியாக சேர்ந்து தற்போது சுபேதாராக உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் விஷ்ணு கலந்துகொண்டார். இதன்மூலம் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இளம் வயது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இவரது தங்கை ரம்யாவும் ஒலிம்பிக் தகுதி தேர்வுக்கு கடைசி வரை சென்றுள்ளார். தற்போது ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற விஷ்ணு வெண்கலம் வென்ற நிலையில், கலப்பு குழு ஜோடி பிரிவில் சித்தேஷ்வருடன் இணைந்து களமிறங்கிய ரம்யா 4வது இடம் பிடித்தார். தமது X வலைத்தள பக்கத்தில் விஷ்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி, ‘தமிழ்நாட்டின் பெயரை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்று பெருமைப்படுத்திய தம்பி விஷ்ணு சரவணனை பாராட்டுகிறோம். எதிர்காலத்தில் அவர் இன்னும் பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவிக்க வாழ்த்துகள்’ என தகவல் பகிர்ந்துள்ளார்.
The post பாய்மரப் படகு போட்டியில் பதக்கம் தமிழக வீரர் விஷ்ணு சாதனை: அமைச்சர் உதயநிதி வாழ்த்து appeared first on Dinakaran.