வாணவேடிக்கையால் விபரீதம்; ஈராக்கில் திருமண மண்டபத்தில் 100 பேர் தீயில் கருகி பலி: 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மொசூல்: ஈராக்கில் திருமண மண்டபத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 100 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடமேற்கே சுமார் 335 கிலோ மீட்டர் தொலைவில் மொசூல் நகரம் உள்ளது. இங்கு கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்குள்ள நினிவே மாகாணம் ஹம்தானியா நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திருமண நிகழ்வை கொண்டாடுவதற்காக வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

திருமண அரங்கில் ஒரு பகுதியில் பற்றிய தீ மளமளவென வேகமாக பரவியது. இதில் மண்டபம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அங்கிருந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் யாரும் வௌியேற முடியவில்லை. மேலும் மண்டபத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 100 பேர் உடல் கருகி பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

திருமண மண்படத்தில் போதிய தீ விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி, தீ விபத்து குறித்து விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரண உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

The post வாணவேடிக்கையால் விபரீதம்; ஈராக்கில் திருமண மண்டபத்தில் 100 பேர் தீயில் கருகி பலி: 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: