உலகத்திற்கு அடுத்த எச்சரிக்கை கொரோனாவை விட கொடிய ‘நோய் எக்ஸ்’ 5 கோடி பேரை பலி வாங்கும் என இங்கி. நிபுணர் கணிப்பு

லண்டன்: கொரோனாவை விட அதிக மனித உயிர்களை பலி வாங்கும் ‘நோய் எக்ஸ்’, உலகின் அடுத்த சர்வதேச தொற்றுநோயாக இருக்கலாம் என இங்கிலாந்து சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். இங்கிலாந்தின் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு குழுவின் தலைவராக பணியாற்றிய தொற்றுநோயியல் நிபுணர் கேட் பிங்காம், டெய்லி மெயில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
‘நோய் எக்ஸ்’ என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள வைரஸ், அடுத்த சர்வதேச தொற்றுநோயாக இருக்கலாம். இது கொரோனாவை விட அதிகமான பலியை ஏற்படுத்தக் கூடும். கடந்த 1918-19ம் ஆண்டில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் உலகளவில் 5 கோடி உயிர்களை பலியாகி வாங்கியது. இது முதலாம் உலகப் போரில் இறந்தவர்களை விட 2 மடங்கு அதிகம். எனவே, தற்போதுள்ள பல வைரஸ்களில் இருந்து ஏதேனும் ஒன்றால், இதே போன்ற இறப்பு எண்ணிக்கையை அடுத்ததாக நாம் எதிர்பார்க்கலாம்.

உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் 25 வைரஸ் குடும்பங்களை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் 10 லட்சத்துக்கும் மேலான கண்டுபிடிக்கப்படாத வைரஸ் மாறுபாடுகள் இருக்கலாம். அவை ஒரு மாறுபாட்டிலிருந்து இன்னொரு மாறுபாட்டிற்கு தாவக்கூடிய திறன் கொண்டவை. 2 கோடி பேரை பலி கொண்டதாக கொரோனா இருந்தாலும், அதிலிருந்து பல பேரை நம்மால் காப்பாற்ற முடிந்தது. ஆனால், நோய் எக்ஸ் போன்ற வைரஸ்கள் எபோலாவின் இறப்பு விகிதத்திற்கு சமமானவை. எபோலா, பறவைக் காய்ச்சல், மெர்ஷ் போன்றவை கிட்டத்தட்ட 67 சதவீத இறப்பு விகிதத்தை கொண்ட வைரஸ்களாகும். எனவே, உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒருவர் நோய் எக்ஸ் வைரசால் விரைவில் பாதிக்கப்படலாம். இதை சமாளிக்க பெரிய அளவில் தடுப்பூசி செலுத்த நாம் தயாராக இருக்க வேண்டும். உடனடியாக தடுப்பூசிகளை வழங்கும் சக்தியை நாம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.

* தொற்றுநோய்கள் அதிகரிப்பது ஏன்?
தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்து வருகிறது என்பது குறித்து கேட் பிங்காம் கூறுகையில், ‘‘நவீன உலகில் வாழ்வதற்கு நாம் செலுத்த வேண்டிய விலைதான் தொற்றுநோய்களின் எண்ணிக்கை பெருக்கம். இதற்கான முதன்மை காரணமே, உலகமயமாக்கல்தான். அடுத்ததாக, அதிகமான மக்கள் நகரங்களுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் அடிக்கடி மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்கிறார்கள். காடுகள் அழிப்பு, நவீன விவசாய முறைகள் மற்றும் சதுப்பு நிலங்களை அழிப்பதால் வைரஸ்கள் அடுத்த மாறுபாடுகளுடன் அதீத சக்தியை பெறுகின்றன’’ என்றார்.

* நோய் எக்ஸ் பற்றி உலக சுகாதார நிறுவனம் அதன் இணையதளத்தில் கடந்த மே மாதம் முதலில் குறிப்பிட்டது. அப்போது, கொரோனாவை விட கொடிய நோய்க்கு உலகம் தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியது.
* கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முதலில் பயன்படுத்தப்பட்ட மோல்னுபிராவிர் மருந்து, வைரஸ் மாறுபாட்டிற்கு முக்கிய பங்களிப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

The post உலகத்திற்கு அடுத்த எச்சரிக்கை கொரோனாவை விட கொடிய ‘நோய் எக்ஸ்’ 5 கோடி பேரை பலி வாங்கும் என இங்கி. நிபுணர் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: