காரைக்காலில் புதை மின்தட உருளை விழுந்து எலக்ட்ரீசியன் பலி

*ரயில்வே பணியின்போது சோகம்

காரைக்கால் : காரைக்காலில் ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்ஒயர் உருளை விழுந்து பலியானார்.புதுனை யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகேயுள்ள சுரக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் விக்னேஸ்வரன் (30). எலக்ட்ரீசியன். தற்போது காரைக்கால்-பேரளம் அகல ரயில் பாதை பணிக்காக மின்சார வயர்கள் கேபிள் பதிக்கும் பணிள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இதில் நேற்று காரைக்கால் ஜிப்மர் வளாகம் அருகே மின்சார கேபிள்களை குழி தோண்டி புதை வழி மின் கேபிள்கள் அமைக்கும் பணியில் விக்னேஸ்வரன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்சார கேபிள் உருளையை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல கிரேனில் ரோப் மூலம் மேலே தூக்கினர். அப்போது கேபிள் கீழே சிக்கியிருந்ததை கவனிக்காமல் கிரேனை உயர்த்தியதால் இழுவை தாங்காமல் ரோப் அறுந்து ராட்சத கேபிள் உருளை கீழே பணியில் இருந்த விக்னேஸ்வரன் மீது விழுந்தது.

இதில் விக்னேஸ்வரனின் மார்பு எலும்பு முற்றிலும் சிதைந்தது. தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காரைக்கால் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். இதில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாததே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கிரேனை பறிமுதல் செய்த போலீசார், ஆப்ரேட்டரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post காரைக்காலில் புதை மின்தட உருளை விழுந்து எலக்ட்ரீசியன் பலி appeared first on Dinakaran.

Related Stories: