வேலியில் மின்சாரம் பாய்ச்சிய பக்கத்து தோட்டக்காரர் கைது

 

பாலக்காடு,செப்.25: மன்னார்க்காடு அருகே தோட்டத்தில் பணியாற்றிய விவசாயி மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். வேலியில் மின்சாரம் பாய்ச்சிய பக்கத்துத்தோட்டக்காரர் கைது செய்யப்பட்டார். பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகா கல்லடிக்கோட்டை அடுத்த காராக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஹம்சப்பா(எ) ஹம்சா (50). இவருக்கு ஆயிஷா என்ற மனைவியும், அப்துல்லாக்குட்டி, நவுபல் என்கிற இரு மகன்களும், கமருனீஷா, சர்புனீஷா, வைருனீஷா என்கிற 3 மகள்களும் உள்ளனர்.

ஹம்சா நேற்று தான் குத்தகைக்கு எடுத்த பாக்கு தோட்டத்தில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டதோடு கீழே வீழ்ந்துள்ள பாக்குகளை சேகரித்து கொண்டிருந்தார்.அப்போது இவரது பக்கத்துத் தோட்டக்காரர் கிருஷ்ணப்பிரகாஷ் தோட்டத்துகம்பி வேலியில் மின்சாரம் சப்ளை செய்துள்ளார். வனவிலங்குகள் மற்றும் திருடர்கள் தோட்டத்திற்குள் புகாமல் இருக்க கம்பிவேலியில் மின்சாரம் சப்ளை செய்து வந்துள்ளார்.

இதை அறியாத ஹம்சா எதிர்பாராதவிதமாக கிருஷ்ணப்பிரகாஷின் தோட்டத்து கம்பி வேலியை தொட்டுள்ளார். இதில் ஹம்சா மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை கவனித்த தோட்டத்தொழிலாளர்கள் உடனடியாக ஹம்சாவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹம்சா பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கல்லடிக்கோடு போலீசார் கிருஷ்ணப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை நேற்று ஏற்படுத்தியது.

The post வேலியில் மின்சாரம் பாய்ச்சிய பக்கத்து தோட்டக்காரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: