ரிஸ்க் எடுத்தேன்… ரஸ்க் ஆகி விட்டேன்… ‘நான் எப்படி அரசியல் விஞ்ஞானி ஆனேன்’: கலாய்ப்புக்கு செல்லூர் ராஜூ ‘கலகல’ விளக்கம்

மதுரை: பொதுக்கூட்டத்தில் தனக்கு கிடைத்த அரசியல் விஞ்ஞானி பட்டம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சுவராசியமாக பேசினார். மதுரை விளாங்குடியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: நாம் அனைவரும் பிறப்பதற்கு முன்பாக இந்த நாட்டில் தெருவில் நடந்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, பேசினால் தீட்டு, பட்டால் பாவம் என்று இருந்த நிலையை அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் மாற்றினார்கள். மேடையில் பேசிப் பேசி வளர்ந்த கட்சிதான் திமுக. இன்றைக்கு அண்ணா, பெரியார் குறித்து ஒருவர் கேவலமாக பேசுகிறார்.

இன்றைய சூழ்நிலையில் ஊடகங்கள் மற்றும் அனைத்து டிவிகள், சமூக வலைதளங்களில் ‘அரசியல் விஞ்ஞானி’ என்று என்னை கேலி கிண்டல் செய்கின்றனர். மதுரை மாவட்டத்தில் அப்போது வறட்சி நிலவியது. வைகை அணையில் தண்ணீர் குறைவாக இருந்தது. இருக்கும் தண்ணீரை வைத்து 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கலாம். அதற்குள் மழை வந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை. இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கலெக்டர், என்னை செல்போனில் தொடர்பு கொண்டு வைகையாற்றுக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே தெர்மாகோல் அட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து தயாராக இருந்தனர்.

அப்போது நானும் அங்கு வைக்கப்பட்டிருந்த தெர்மாகோல் அட்டைகளை வைகை அணை தண்ணீரில் வைத்தேன். வைத்தது தான் தாமதம். அந்த நேரத்தில் வீசிய காற்றின் வேகத்தில் தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் பறந்தன.
இந்த செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டிசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன். இதற்கு நான் விளக்கம் எத்தனை முறை சொல்வது? சொல்லி, சொல்லியே ஓய்ந்து போய் விட்டேன். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்தேன். இப்படி ரஸ்க் ஆகி விட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post ரிஸ்க் எடுத்தேன்… ரஸ்க் ஆகி விட்டேன்… ‘நான் எப்படி அரசியல் விஞ்ஞானி ஆனேன்’: கலாய்ப்புக்கு செல்லூர் ராஜூ ‘கலகல’ விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: