வெல்லாலகே, அசலங்கா அபார பந்துவீச்சு இந்தியா 213 ஆல் அவுட்

கொழும்பு: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இலங்கைக்கு எதிரான சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டத்தில் இந்தியா 49.1 ஓவரில் 213 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கொழும்பு, ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்சர் படேல் இடம் பெற்றார். கேப்டன் ரோகித், கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 80 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

கில் 19 ரன் எடுத்து துனித் வெல்லாலகே சுழலில் கிளீன் போல்டாக, அடுத்து வந்த விராத் கோஹ்லி 3 ரன் மட்டுமே எடுத்து வெல்லாலகே பந்துவீச்சில் ஷனகா வசம் பிடிபட்டார். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ரோகித் 53 ரன் எடுத்து (48 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) வெல்லாலகே சுழலில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து 3 விக்கெட் விழுந்ததால், இந்தியா 91 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், இஷான் கிஷன் – கே.எல்.ராகுல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ராகுல் 39 ரன் எடுத்து (44 பந்து, 2 பவுண்டரி) வெல்லாலகே பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இஷான் 33 ரன் (61 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்திக் 5, ஜடேஜா 4, பும்ரா 5, குல்தீப் (0) ஆகியோர் அணிவகுப்பு நடத்த… இந்தியா 42.2 ஓவரில் 186 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், அக்சர் படேல் – முகமது சிராஜ் ஜோடி ஸ்கோரை உயர்த்த கடுமையாகப் போராடியது. இந்தியா 47 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. சிறிது நேர காத்திருப்புக்குப் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், அக்சர் 26 ரன் எடுத்து (36 பந்து, 1 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தியா 49.1 ஓவரில் 213 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிராஜ் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் வெல்லாலகே 5, அசலங்கா 4, தீக்‌ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

* ரோகித் 10,000
இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை நேற்று எட்டினார் (241வது இன்னிங்ஸ்). இந்த சாதனையை நிகழ்த்தும் 6வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது (உலக அளவில் 15வது வீரர்). தனது 248வது ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடிய ரோகித் இதுவரை 10,031 ரன் (அதிகம் 264, சராசரி 48.91, சதம் 30, அரை சதம் 51) எடுத்துள்ளார். இந்திய வீரர்களில் சச்சின் (18,426), கோஹ்லி (13,024), கங்குலி (11,623), டிராவிட் (10,889), எம்.எஸ்.தோனி (10,773) ஆகியோருக்கு அடுத்த இடத்தை ரோகித் பிடித்துள்ளார். உலக அளவில் இலங்கையின் சங்கக்கரா (14,234), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (13,704), சனத் ஜெயசூரியா (இலங்கை, 13,430), ஜெயவர்தனே (இலங்கை, 12,650), இன்சமாம் உல் ஹக் (பாக்., 11,739), ஜாக் காலிஸ் (தென் ஆப்ரிக்கா, 11,579), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல் (10,480), பிரையன் லாரா (10,405) ஆகியோரும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

The post வெல்லாலகே, அசலங்கா அபார பந்துவீச்சு இந்தியா 213 ஆல் அவுட் appeared first on Dinakaran.

Related Stories: