மழை வேண்டி வருண யாகம் தொடங்கியது திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு பாதையிலும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும்

*அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை : நாடு முழுவதும் மழை பெய்ய வேண்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருண யாகம் துவங்கியது. இதில் பங்கேற்ற அறங்காவலர் குழு தலைவர் திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு பாதையில் செல்லும் பக்தர்களுக்கும் விரைவில் கைத்தடி வழங்கப்படும் என தெரிவித்தார்.நாடு முழுவதும் மழை பெய்ய வேண்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில், திருப்பதி அடுத்த ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஸ்ரீநிவாச அஷ்டோத்தர மகாசாந்தி வருண யாகம் நேற்று அங்குரார்பணத்துடன் தொடங்கியது. வருண யாகத்தின் ஒரு பகுதியாக ஆச்சார்ய ருத்விக் வாரணம் பூஜை நேற்று காலை நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர், அர்ச்சகர்களுக்கு மஞ்சள் வஸ்திரங்களை வழங்கினார்.

பின்னர் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 11ம் தேதி(நாளை மறுதினம்) வரை இங்கு யாகம் நடைபெறவுள்ளது. திருமலை தர்மகிரியில் ஒரு மாதத்திற்கு முன் நடத்தப்பட்ட வருண யாகம் காரணமாக மழை பெய்தது. இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் மழை குறைவாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், மக்கள் நலன் கருதி இந்த யாகம் தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த யாகம் மிகவும் கடினமானது, மிகவும் முக்கியமானது. இதுபோன்ற யாகம் கடந்த காலங்களில் நடந்ததில்லை. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த அர்ச்சகர்கள், 60க்கும் மேற்பட்ட வைகானச பண்டிதர்கள், 30க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள், 215க்கும் மேற்பட்ட ருத்விக்கள் இந்த யாகத்தை நடத்துகிறார்கள்.

இந்த யாகத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக கைத்தடி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், ஸ்ரீவாரிமெட்டு பாதையில் செல்லும் பக்தர்களுக்கும் விரைவில் கைத்தடி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மம், கோயில் துணை இ.ஒ.வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post மழை வேண்டி வருண யாகம் தொடங்கியது திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு பாதையிலும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: