பாலசோர் ரயில் விபத்து; 3 அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை: ஆதாரங்களை அழித்ததாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் 3 அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயிலுடன் மோதியது. அதன் சில பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்து எதிரே வந்த யஷ்வந்த்பூர்-அவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் 296 பேர் பலியானார்கள். 1200 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சீனியர் பிரிவு பொறியாளர்(சிக்னல்) அருண் குமார் மகந்தா, செக்‌ஷன் பொறியாளர் அமீர் காந்த் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பப்பு குமார் ஆகிய மூன்று பேரையும் சிபிஐ அதிகாரிகள் ஜூலை 7ம் தேதி கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக புவனேஸ்வரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதில் பாலசோர் ரயில் விபத்து தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட 3 ரயில்வே அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 பகுதி II (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), பிரிவு 34 உடன் 201 (ஆதாரங்களை அழிப்பது) மற்றும் ரயில்வே சட்டம் 153 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The post பாலசோர் ரயில் விபத்து; 3 அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை: ஆதாரங்களை அழித்ததாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: