ராஜதானி சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு: போலீசார் சோதனை நடத்த கோரிக்கை

 

ஆண்டிபட்டி, ஆக. 28: ஆண்டிபட்டி அருகே ராஜதானி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதால் போலீசார் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ராஜதானி போலீஸ் நிலைய சரகத்தில் பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, பாலக்கோம்பை அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் தேவைக்கு ஏற்ப அந்தந்த கிராமங்களில் சிறிய அளவிலான மளிகை கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் மற்றும் தின்பண்டம் கடைகள் அமைந்துள்ளன.

இந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதால் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே ராஜதானி போலீசார் கிராமங்களில் உள்ள கடைகளில் சோதனை செய்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ராஜதானி சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு: போலீசார் சோதனை நடத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: