தகுதியும், முன் அனுபவமும் இல்லாத போதிலும் அதானியிடம் ஒப்படைக்கப்பட்ட பாரத்மாலா திட்டங்கள்

*பாஜவுக்கு நிதி தந்தவர்களுக்கும் விதிகளை மீறி திட்ட அனுமதி

*சமர்ப்பித்த ஆவணங்கள் தவறாக இருந்தும் அனுமதி வழங்கப்பட்ட அவலம்

*உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரிக்கக்கூடிய அடுத்த ஊழல் அம்பலம்

பிரதமரின் நெருக்கம் இருந்தால் போதும் கனவிலும் நினைக்காத திட்டங்களும் கிடைக்கும் என்பது ஒன்றிய பாஜ அரசின் சித்தாந்தமாக மாறிவிட்டதோ என்று ஐயப்படுகின்ற அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார் அதானி. எதிர்க்கட்சிகள் தரப்பில் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் புறங்கையால் தள்ளிவிட்டு, கர்ண பரம்பரையில் வந்தவர்களைப்போல, அதானி மற்றும் பாஜவுக்கு தாராள நிதி தரும் தொழிலதிபர்களின் நிறுவனங்கள், பாஜ முக்கிய பிரமுகர்களின் நிறுவனங்களுக்கு தகுதியில்லாத போதிலும் திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது பாரத் மாலா திட்டம்.

நாட்டின் எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகள், துறைமுகங்கள், சுற்றுலா தலங்கள், 100 மாவட்ட தலைமையகங்கள் ஆகியவற்றை இணைக்கும் 34,800 கிமீ நீள சாலை அமைப்பது தான் பாரத் மாலா திட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒன்று என்பதால் தகுதி வாய்ந்த, முன் அனுபவம் பெற்ற நிறுவனங்களுக்குதான் இந்த திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பது காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை. ஆனால், பாரத் மாலா திட்ட பணிகள் ஒப்படைக்கப்பட்டது தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கை, முறைகேடுகள், விதி மீறல்களின் உச்சத்தை பிரதிபலிப்பதாகவும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. காரணம், அனுபவமும், தகுதியும் இல்லாத போதும் அதானி நிறுவனங்களுக்கும் பாஜவுக்கு தாராள கட்சி நிதி வழங்கிய மற்றும் பாஜ தலைவர்களின் நிறுவனங்களுக்கும் விதிகளை மீறி திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன.

உதாரணமாக, அதானி டிரான்ஸ்போர்ட் தலைமையிலான நிறுவனங்களின் கூட்டமைப்பில் உள்ள சூர்யபேட் கம்மம் ரோடு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தெலங்கானாவில் உள்ள சூர்யபேட் மற்றும் கம்மம் இடையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் கொஞ்சம் கூட முன் அனுபவம் இல்லை. இதேபோன்று தான், பிஎன்ஆர் இன்போடெக் என்ற உள்கட்டமைப்பு நிறுவனத்திற்கு லக்னோ வட்டச்சாலை (ரிங் ரோடு) திட்டப் பணியின் ஒரு பகுதி 2019ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கான மதிப்பீட்டு செலவு, நிர்ணயித்திருந்ததை விட 17.44 சதவீதம் அதிகம். இது மட்டுமின்றி மறுமதிப்பீட்டிலும் திட்டச் செலவு 2.02 சதவீதம் அதிகரித்துவிட்டது. இந்த நிறுவனம் பாஜ தலைவர் நவீன் ஜெயின் என்பவருக்குச் சொந்தமானது. திட்டப்பணி ஒப்படைக்கப்பட்ட போது ஆக்ரா மேயராக இருந்தவர் தான் நவீன் ஜெயின். இதேபோன்று, ஐஆர்பி இன்ஃப்ரா ஸ்டிரக்சர் டெவலப்பர்ஸ், ஜெ குமார் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் எம்கேசி இன்ப்ரா ஸ்டிரக்சர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும் பாரத் மாலா திட்டப்பணிகள் ஒப்படைக்கப்பட்டதில் விதிகள் மீறப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இவ்வாறு விதிகளை மீறி திட்டப் பணிகளை ஒப்படைத்ததற்கு காரணம், இந்த 4 நிறுவனங்களும் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பாஜவுக்கு கட்சி நிதியாக ரூ.77 கோடி கொடுத்திருக்கின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது.

* அதானி தலைமையில் இணைந்த நிறுவனங்கள்
திட்டப் பணிகளுக்கு விண்ணப்பித்த நிறுவனங்களின் கூட்டமைப்பில் அதானி நிறுவனம் வைத்துள்ள பங்கு 74 சதவீதம். இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அந்தத் துறையில் குறைந்த பட்சம் 6 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த அடிப்படை விதியை கூட பூர்த்தி செய்யாத, நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட சாலை பணிகளில் ஈடுபட்டிராத அதானி நிறுவனம் தான் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு தலைமை ஏற்றுள்ளது.

அதாவது அதானி நிறுவனத்துக்கு சாலை பணிகளில் அனுபவம் இல்லாதபோதும், பிறதுறை நிறுவனங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட துறை அனுபவங்களை தனதாக்கி எந்த வகையிலாவது சம்பந்தம் இல்லாத திட்டங்களை கூட டெண்டர் எடுத்து விடுகிறது.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) திட்டத்தின் மொத்த செலவினத்தில் 40 சதவீத பங்களிப்பை வழங்கும். எஞ்சிய 60 சதவீதம் சாலை மேம்பாட்டு திட்டப் பணியில் ஈடுபடும் நிறுவனம் ஏற்க வேண்டும். இந்த 60 சதவீதத்தில் 20 முதல் 25 சதவீத தொகையை தன்னிடம் இருந்த நிதியிலிருந்து எடுத்துக்கொண்டு எஞ்சிய தொகையை வங்கிகளில் கடனாக பெறுவது வழக்கம்.

* குறைந்த பிரீமியம் குறிப்பிட்டும் கைமாறிய டெண்டர்
லக்னோ வட்டச்சாலை (ரிங் ரோடு) திட்டப் பணியின் ஒரு பகுதி பணிக்கு கடந்த 2019 மார்ச் 7ம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டிருந்தது. திட்ட மதிப்பீடாக ரூ.904.31 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைவிட அதிகமாக ரூ.1,062 கோடி மதிப்புக்கு பிஎன்சி இன்போடெக் நிறுவனத்திற்கு திட்டப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது முதலில் நிர்ணயித்த தொகையை விட 17.44 சதவீதம் அதிகமாகும். இந்த ஐஆர்பி இன்ஃப்ரா ஸ்டிரக்சர் நிறுவனம் பாஜவுக்கு கட்சி நிதியாக கடந்த 2013ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.65 கோடி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஹாப்பூர் பைபாஸ் – மொராதாபாத் நெடுஞ்சாலை திட்டப் பணியை ஏற்றுள்ளது.

அதுவும் 68 சதவீதம் குறைந்த பிரீமியத்துக்கு எடுத்துள்ளது. அதாவது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தத் திட்டத்திற்கு டெண்டர் வெளியிடும்போது, சாலை திட்டத்தை முடித்த பிறகு அரசுக்கு இந்த நிறுவனம் ஆண்டு பிரீமியமாக ரூ.97.99 கோடி செலுத்த வேண்டும். பின்னர், 22 ஆண்டுகளுக்கு சுங்க கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம். ஆனால், 2018ம் ஆண்டில், இந்த நிறுவனம் சமர்ப்பித்த டெண்டரில் ஆண்டு பிரீமியமாக ரூ.31.5 கோடி மட்டுமே வழங்குவதாக குறிப்பிட்டிருந்தும், நெடுஞ்சாலை ஆணையம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. திட்டப் பணி நடைபெற உள்ள சாலையில் செல்வதாக உத்தேசிக்கப்படும் வாகன போக்குவரத்து மற்றும் விரிவான திட்ட அறிக்கையின்படி உள்ள மொத்த விலை புள்ளி அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரத்தில், ஐஆர்பி நிறுவன இணையதளத்தில் மேற்கண்ட திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.3,345 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திட்ட தேதியிலிருந்து ஒரு வாரத்துக்குள்ளாகவே இந்த முடிவுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வந்துள்ளது. திட்ட மதிப்பீட்டில் தவறுகள் இருந்த போதிலும் எந்த ஒரு நியாயமான காரணமோ அல்லது மறு டெண்டர் விடுவதற்கான முயற்சியிலோ ஈடுபடாமல் அவசரகதியில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது குறித்து சிஏஜி அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால் திட்டத்தை வடிவமைத்து அதனை கட்டி முடித்து இயக்குவது மற்றும் ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட கால அளவு வரை சோதனை சாவடி மூலம் வருவாய் ஈட்டிக் கொள்வது பின்னர் அரசிடம் திட்டத்தை ஒப்படைப்பது என்ற அடிப்படையில் தான் மேற்கண்ட திட்டம் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஐஆர்பி இன்ப்ரா ஸ்டிரக்சர் நிறுவனம் கடந்த 2020-21 நிதியாண்டில் பாஜவுக்கு ரூ.20 கோடியும் இதனுடன் தொடர்புடைய 3 நிறுவனங்கள் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ரூ.45 கோடியும் கட்சி நிதியாக வழங்கியிருக்கின்றன. கட்சி நிதியும். அதானியுடன் கூட்டும் தகுதியாகுமா? கடந்த 2018 டிசம்பர் மாதம் ஜெ குமார் இன்ப்ரா ப்ராஜெக்ட் நிறுவனம் துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் ஒரு பகுதியை ரூ.1,349 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் எடுத்திருந்தது.

இந்தத் திட்டப் பணியை கைக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் சுரங்கப்பாதை அமைப்பதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அடிப்படை விதியை கூட பூர்த்தி செய்யாத இந்த நிறுவனம் திட்ட பணியை கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பாஜவுக்கு கட்சி நிதியாக ரூ.6.46 கோடி வழங்கி இருக்கிறது. இதுபோல் 2017-18 நிதியாண்டில் ரூ.5.25 கோடி, 2015-16 நிதியாண்டில் ரூ.1 கோடி மற்றும் 2013-14 நிதியாண்டில் ரூ.21 லட்சம் கட்சி நிதியாக வழங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக ராகு சந்திரா உள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவராக 2015ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.

மேலும் ஜிஆர் இன்ப்ரா ஸ்டிரக்சர் ப்ராஜெக்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிஆர் ஹைவேஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர் நிறுவனத்துக்கு கூடுதல் இயக்குனராகவும் இருந்தவர். இதுபோல் வெல்ஸ்புன் என்டர்பிரைஸ் நிறுவன இயக்குநராகவும் உள்ளார். அதானி குழுமமும் வெல்ஸ்புன் நிறுவனமும் இணைந்து அதானி வெல்ஸ்புன் துரப்பன நிறுவனம் என்ற பெயரில் எரிவாயு துரப்பன பணிகளில் ஈடுபட்டுள்ளன. இது தவிர ஜெ குமார் இன்ப்ரா புராஜெக்ட் நிறுவனம் மிச்சிகன் இன்ஜினியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்து வருகிறது. மிச்சிகன் இன்ஜினியர்ஸ் நிறுவனம் வெல்ஸ்புன் என்டர்பிரைசில் 50.10 சதவீதம் பங்கினை கொண்டுள்ளது. ஜெ குமார் நிறுவனம் பாஜவுக்கு கட்சி நிதியாக ரூ.6.46 கோடி வழங்கியுள்ளது.

இதுஒருபுறம் இருக்க, ஜெ குமார் இன்ப்ரா புராஜெக்ட் நிறுவனத்தை மும்பை மாநகராட்சி கடந்த 2016ம் ஆண்டு தடைப் பட்டியலில் வைத்திருந்தது. 2015ம் ஆண்டு நடந்த சாலை திட்ட ஊழல் விவகாரத்தை தொடர்ந்து இந்த முடிவை மும்பை மாநகராட்சி அப்போது எடுத்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டு மும்பையில் பாலம் ஒன்று இடிந்து விழுந்து நொறுங்கியது. இந்த பாலம் ஜெ குமார் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு திட்டத்தை வழங்கியதற்கு, பாஜ தலைமையிலான அப்போதைய மகாராஷ்டிர அரசை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

* எம்கேசி இன்ப்ராஸ்டிரக்சர் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ
டெல்லி – வதோதரா இடையிலான விரைவு சாலை திட்டத்தில் ஜியாங் சி கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் கார்ப்பரேஷன், எம்கேசி இன்ப்ராஸ் ஸ்டிரக்சர், ஜிஆர் இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) மற்றும் ஜிஎச்வி இந்தியா ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிறுவனங்களில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் 2014-15 நிதியாண்டில் பாஜவுக்கு ரூ.5 கோடி, எம்கேசி இன்ப்ரா ஸ்டிரக்சர் நிறுவனம் 2018 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையே ரூ.75 லட்சம் கட்சி நிதியாக வழங்கியிருந்தனர்.

டெல்லி – வதோதரா விரைவுச் சாலை திட்டத்தின் மதிப்பு ரூ.32,839 கோடி. கட்டுமானச் செலவு ரூ.11,209.21 கோடி. மேற்கண்ட சாலைத் திட்டத்தில் வழங்கப்பட்ட 31 திட்டப் பணிகளுக்கு சேர்த்து மேற்கண்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.‌ இதில் கடந்த 2019 மே மாதம் முதல் 2020 ஜூன் மாதம் வரை வழங்கப்பட்ட 8 திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது. அதாவது டெண்டர் வெளியிடுவதற்கு முன்பு புதிய மதிப்பீட்டுக்கான கட்டணங்கள் இருந்த போதிலும் ஏற்ெகனவே நிர்ணயித்த பழைய கட்டணத்தின் அடிப்படையில் இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது என சிஏஜி தெரிவித்துள்ளது.

மேற்கண்ட 8 திட்ட பணிகளில் 5 பணிகள் ஜிஆர் இன்பிரா ப்ராஜெக்ட்ஸ், ஜிஎச்வி இந்தியா மற்றும் எல் அண்ட் டி தலா 1 மற்றும் எம்கேசி இன்ப்ராஸ்டிரக்சர் 2 பணிகளை ஏலம் எடுத்துள்ளன. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கூடிய அளவிற்கு இந்த ஊழல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் ஆதரவுடன் மின்துறை, துறைமுகங்களை தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு துறையாக அதானி நிறுவனம் கபளீகரம் செய்து வருகிறது. சமீபத்தில் கூட, மும்பையில் தாராவி குடிசை மேம்பாட்டு திட்டப் பணிகளை ஷிண்டே தலைமையிலான பாஜ கூட்டணி அரசு கொடுத்ததற்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகின்றன.

இதனால்தான், அதானிக்கு மட்டும் விதிகளை மீறி சலுகைகளை அள்ளித்தருவதன் மர்மம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒற்றை விரலை நீட்டி மற்றவர்களை குறை சொல்லத் தொடங்குபவர்கள் தன்னை நோக்கி மற்றவர்கள் நீண்டிருப்பதை மறந்து விடுகிறார்கள் என்ற பொன்மொழி பாஜவுக்கு முற்றிலும் பொருந்தும் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். சாதனை என்றால் தங்களுக்கே சொந்தம் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒன்றிய அரசு, குறைகள், பிரச்சினைகள் ஏற்பட்டால் அதன் பழி மொத்தத்தையும் முந்தைய ஆட்சியாளர்கள் மீது போடுவது எந்த விதத்தில் நியாயம்? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

*தவறான ஆவணங்கள்… தரமற்ற பணி
ஜிஆர் இன்ப்ரா புராஜக்ட் நிறுவனம் பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச்சில் கட்டிய பாலம் கடந்த ஜூன் மாதம் இடிந்து விழுந்தது. இதன்பிறகு, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து திட்ட தொகையை பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த நிறுவனத்தில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது. இதேபோன்றுதான், ஜிஎச்வி இந்தியா நிறுவனமும், நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக வெளியான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாகவே, தவறான ஆவணங்களின் அடிப்படையில் டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.

இதுமட்டுமின்றி, கடந்த 2018ல் கேஆர்சி இன்ப்ரா நிறுவனத்துக்கு குவாலியர் – ஷிவ்புரி நெடுஞ்சாலையில் 4 கி.மீ சாலை அமைக்க ரூ.18.39 கோடி ஒப்பந்தத்தை வழங்கியது தொடர்பாகவும் சிஏஜி விமர்சனம் செய்திருந்தது. மேலும், லக்னோ வட்டச்சாலை திட்டப்பணியில் டெண்டரில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தவறாக இருந்தபோதிலும், திட்டத்தை இந்த நிறுவனத்திடம் நெடுஞ்சாலை ஆணையம் ஒப்படைத்துள்ளது. இதுபோல், சுராசந்த்பூர் – துய்வாய் திட்டமும் விதிகளுக்கு மாறாக தகுதியற்ற ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது என சிஏஜி தெரிவித்துள்ளது. சுராசந்த்பூர் – துய்வாய் மற்றும் சித்தூர் – மல்லாவரம் திட்டங்கள், விரிவான திட்ட அறிக்கை பெறுவதற்கு முன்பாகவே ஒப்படைக்கப்பட்டுள்ளன என சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.

The post தகுதியும், முன் அனுபவமும் இல்லாத போதிலும் அதானியிடம் ஒப்படைக்கப்பட்ட பாரத்மாலா திட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: