காட்பாடி, சத்துவாச்சாரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை கண்டறிய 60 கடைகளில் ஆய்வு

*11 கடைகளுக்கு ₹14 ஆயிரம் அபராதம்

வேலூர் : காட்பாடி, சத்துவாச்சாரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா? என்று 60 கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 11 கடைகளுக்கு ₹14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார்கள் கூறப்பட்டது.

அதன்பேரில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின்பேரில் மாநகராட்சி 1வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சுஷ்மிதா ஆகியோர் நேற்று காட்பாடி ரயில் நிலையம், காட்பாடி சாலை ஆகிய இடங்களில் உள்ள டீக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது 10 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு ₹4 ஆயிரம் அபராதம் விதித்து 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் சத்துவாச்சாரி பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள மளிகை கடையில் இருந்த சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த கடைக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோன்று அனைத்து பகுதிகளிலும் இனி, தீவிர சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காட்பாடி, சத்துவாச்சாரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை கண்டறிய 60 கடைகளில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: