மணிகண்டன் (28) அக்ரி டிப்ளமோ படித்துவிட்டு, கரும்பாக்கம் கிராமத்தில் உரங்கள், வேளாண் பூச்சி மருந்துகள், விதைகள் விற்பனை செய்யும் கடையை சொந்தமாக நடத்தி வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வடகடம்பாடியில் இருந்து கரும்பாக்கத்தில் உள்ள தன் கடைக்கு வருவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 20ம் தேதி மதியம் கடையில் இருந்து நெம்மேலி பேரூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் திருப்போரூர் வழியாக கரும்பாக்கம் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மடையத்தூர் அருகே உத்தரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மணிகண்டனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மணிகண்டன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மணிகண்டனின் தந்தை ஏகாம்பரம், தாய் அஞ்சலை, மனைவி ஹேமலதா, சகோதரர் உதயகுமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவக் குழுவினர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவித்து உடல் உறுப்புகள் தேவை குறித்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, 2 இதய வால்வுகள், 2 சிறுநீரகங்கள், இரண்டு கண்கள், ஒரு கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத்த செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்புகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. திருமணமாகி ஏழே மாதத்தில் விபத்தில் மரணமடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
* ஹெல்மெட்டால் வந்த வினை
விபத்தில் சிக்கிய மணிகண்டன் எப்போதும் ஹெல்மெட் அணிந்திருப்பார். விபத்து நடந்த போதும் அவர் ெஹல்மெட் அணிந்திருந்தார். ஆனால், கழுத்தில் மாட்டும் பட்டையை அவர் அணியவில்லை. இதனால், ஹெல்மெட் பாதி கழன்று தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கழுத்துப் பட்டையை அணிந்திருந்தால் உயிர் இழப்பை தவிர்த்து இருக்கலாம்.
* சோகத்திலும் விழிப்புணர்வு
திருமணமாகி 7 மாதமே ஆன நிலையில், கணவர் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்த தகவலை அவரது மனைவி ஹேமலதாவிடம் தெரிவித்தபோது முதலில் சோகத்தில் மூழ்கினார். பின்னர் அவர், உடல் உறுப்பு தானத்துக்கு சம்மதம் தெரிவித்து கையொப்பமிட்டார். அவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சோகத்திலும் 7 பேரின் உயிரை காப்பாற்றிய ஹேமலதாவின் இந்த செயலை பலரும் பாராட்டி உள்ளனர்.
The post திருப்போரூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: திருமணமான 7 மாதங்களில் சோகம்; இளம் மனைவியை பாராட்டிய மக்கள் appeared first on Dinakaran.
