சிவில் நீதிபதி பதவி 245 பணியிடத்துக்கான எழுத்து தேர்வை 12,037 பேர் எழுதினர்: தேர்வு மையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை: உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு நீதித்துறையில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பணியிடங்கள், கடந்த 2014ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜூன் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இத்தேர்வுக்கு ஏராளமான வழக்கறிஞர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.

இதில் 12,037 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 6031 பேர், பெண்கள் 6005 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இந்நிலையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. முதல்நிலை தேர்வு 32 தேர்வு மையங்களில் 43 தேர்வு கூடங்களில் நடந்தது. தேர்வு கண்காணிப்பு பணியில் 42 தலைமை கண்காணிப்பாளர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னையை பொறுத்தவரை 4044 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 13 மையங்களில் 14 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

தேர்வு நடைபெற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு அக்டோபர் மாதம் 4 நாட்கள் நடக்கிறது. அதாவது, அக்டோபர் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மொழியாக்கம் தேர்வு நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் தாள்(சட்டம்) தேர்வு நடக்கிறது. 29ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3ம் தாள் தேர்வும் நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

The post சிவில் நீதிபதி பதவி 245 பணியிடத்துக்கான எழுத்து தேர்வை 12,037 பேர் எழுதினர்: தேர்வு மையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: